‘யூடியூப்’ சர்ச்சை பதிவுகளுக்கு கடிவாளம்!


சாட்டை துரைமுருகன்

சமீபகாலங்களில் சமூகவலைதள பதிவுகள் சர்ச்சையாகி வரும் சூழலில், அதற்கு கடிவாளம் போடுவதற்கான வழிமுறைகளை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு சைபர் க்ரைம் டிஜிபிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் சமூகவலைதளங்களில் சர்சைக்குரிய பதிவுகளை பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனலை தொடங்கி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒன்றை காரணத்துக்காக வரைமுறை இல்லாமல், கண்டதையும் பதிவேற்றி பிரச்சினையை உருவாக்கும் நிலை தான் உள்ளது. இந்நிலையில் தான் யூடியூப் சர்ச்சை பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் யோசனையை முன்வைத்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

சர்ச்சைக்குரிய சமூகவலைதள பதிவுகளுக்கு பெயர் போனவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூப்பர் சாட்டை துரைமுருகன். திமுக தலைவர் கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக துரைமுருகனை தஞ்சாவூர் போலீஸார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டபோது, ‘இனிமேல் யார் மீதும் அவதூறு பரப்பமாட்டேன்’ என கடிதம் எழுதி கொடுத்து ஜாமீன் பெற்றார். அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டம் தக்கலை ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கைதானார்.

இந்த சூழலில், நீதிமன்றத்தில் கடிதம் எழுதி கொடுத்து விட்டு அதை மீறியுள்ளார். இதனால் தஞ்சாவூர் அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தை நாடியது காவல்துறை. இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை

இதையடுத்து நீதிபதி, ‘யாராக இருந்தாலும் அரசியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாட்டை துரைமுருகனின் தொழில் என்ன? யூடியூப்பில் அவதூறு பரப்புவதால் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது? என சரமாரி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நீதிபதி, ‘நாட்டு வெடி குண்டு தயாரிப்பது எப்படி? துப்பாக்கி தயாரிப்பது எப்படி? கள்ளச் சாராயம் காய்ச்சுவது எப்படி? வங்கிகளில் கொள்ளையடிப்பது எப்படி? என்றெல்லாம் யூடியூப்பில் வீடியோக்கள் வருகின்றன. அந்த வீடியோக்களை பார்த்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதுபோன்ற பதிவுகளை தடுக்க அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. வேறு மாநிலங்களில் இருந்தும் தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அப்படியிருக்கும் போது யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது?’ என கடுமையாக கேட்டார்.

பின்னர், யூடியூப்பில் தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஒரு வாரத்தில் சைபர் க்ரைம் டிஜிபி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி.

x