பக்ரீத்: களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனையானது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின் போது அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன.

தற்போது ஜூன் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று திருமங்கலம் ஆட்டுச்சந்தை பக்ரீத் சிறப்பு ஆட்டுச் சந்தையாக நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்கள் தவிர வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

அதிகாலை 4 மணி முதலே ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது. ஒரு ஆட்டின் விலை ரூ. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூ‌.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.