திமுக திட்டத்தை கிடப்பில் போட்ட அதிமுக?


பயன்பாடின்றி துருப்பிடித்துக் கிடக்கும் இணை மின் உற்பத்தி ஆலை

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளதால், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி விரைந்து தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆலை உறுப்பினர்கள் மத்தியில் கோரிக்கையாக எழுந்துள்ளது.

தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்திசெய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் காற்றாலை, சூரிய ஒளி போன்ற மாற்றுவழி மின் உற்பத்தியையும் அரசு ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2010-2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்போது, இணை மின் உற்பத்தி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

‘பக்காஸ்’ எனப்படும் கரும்பு சக்கையைக் கொண்டு 15 மெகா வாட் மின்சாரம் உற்பத்திசெய்ய திட்டமிடப்பட்டது. இதில் ஆலை பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ள மின்சாரத்தை அரசு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் மூலம் ரூ.80 கோடி மதிப்பில் சர்க்கரை ஆலை வளாகத்தில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்கப்பட்டது. எனினும், இத்திட்டம் அடுத்துவந்த அதிமுக ஆட்சிகாலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாததால், ஆலை வளாகத்தில் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்ட ஆலை துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக மக்கும்நிலையில் இருப்பதாக ஆலை உறுப்பினர்கள் புகார் எழுப்பியுள்ளனர். அதேவேளையில் இணை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தினால், ஆலைக்கான மின் தேவை பூர்த்தியாவதுடன், மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு வழங்கி வருவாயும் ஈட்டமுடியும் எனவும் ஆலை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓ.பி. குப்புதுரை

இதுகுறித்து சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் ஓ.பி. குப்புதுரை கூறியதாவது: “கடந்த 2010-2011-ம் ஆண்டு மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.80 கோடி மதிப்பில் இணை மின் உற்பத்தி செய்வதற்கான ஆலை கட்டமைக்கப்பட்டது. இந்த முதலீட்டு தொகையில் ஆலை உறுப்பினர்களான கரும்பு விவசாயிகளின் பங்கு 10 சதவீதமாகும்.

இதற்காக ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளிடம் டன்னுக்கு ரூ.25 வீதம் பிடித்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக இத்தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், இணை மின் உற்பத்தி செய்வதற்கான கட்டுமானப் பணியை மேற்கொண்டது. எனினும், திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படாமல் பாதியுடன் நிறுத்தப்பட்டது. அதேவேளையில் இத்திட்டத்துக்காக கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை என்னவானது எனவும் தெரியவில்லை.

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி தொழில் துறை மட்டுமின்றி மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தபோதும் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால், இது கிடப்பில் போடப்பட்டது. ஆலையின் கரும்பு அரவை பருவ சமயத்தில் கரும்புப் பாகு உற்பத்தி செய்வதற்கான பாய்லரை இயக்க நிலக்கரி தேவைப்படும்.

இதற்காக ஆலையில் உள்ள கரும்புச் சக்கையை, கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு வழங்கி, அதற்கு பதில் அவர்களிடம் இருந்து நிலக்கரி பெற்று பயன்படுத்தப்படுகிறது. ஆலையில் இணை மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தினால், நிலக்கரி கொள்முதலே தேவைப்படாது. இங்கேயே 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த மின்சாரத்தின் மூலம் பாய்லரை இயக்க முடியும். ஆலைக்கு தேவையான மின்சாரம் போக மீதமுள்ளவற்றை அரசுக்கு விற்பனை செய்யலாம். இதன்மூலம் கணிசமான லாபமும் ஈட்டமுடியும். இத்தொகையை ஆலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். அதேவேளையில் ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு போனஸ் வழங்குதல், கரும்புக்கு கூடுதல் விலை, உரம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும். திட்டத்தை தொடங்கிய திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளதால், ஆலையில் இணை மின் உற்பத்தியை தொடங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் கே.பி.எஸ். சுரேஷ்குமார் கூறும்போது, “கடந்த திமுக ஆட்சியில் 11 கூட்டுறவு ஆலைகளில் இணை மின் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. அனைத்து ஆலைக்கும் ஒரேசமயத்தில் இணைமின் உற்பத்தி தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிர, 11 ஆலைகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் ஒரே காண்டிராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்ட ஆலைகளில் இணை மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகளைக் குறிப்பிட்ட அளவுக்குமேல் அவர்களால் செய்ய இயவில்லை.

கே.பி.எஸ். சுரேஷ்குமார்

எனவே, டிஎன்பிஎல் பாய்லர் உள்ள ஆலைகளில் மேற்கொள்ளப்படும் பணியை நிறுத்தி வைத்தனர். பாய்லர் இல்லாமல் எரிபொருள் கொண்டு இயக்கும் ஆலைகளில், இணை மின் உற்பத்திக்கான பணியைத் தொடங்கினர். அந்த வகையில் 9 ஆலைகளில் இணை மின் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. சமீபத்தில் பணிமுடிந்த 3 ஆலைகளில் இணை மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. டிஎன்பிஎல் பாய்லர் இருந்ததால், மோகனூர் ஆலைப் பணிகள் கடைசியாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அடுத்தது, மோகனூர் ஆலையில் இணை மின் உற்பத்திக்கான பணி தொடங்கப்பட உள்ளது. மின் உற்பத்தி தொடங்காததற்கு டெண்டர் ஒரே நபரிடம் கொடுத்ததுதான். அதேவேளையில் மற்ற ஆலைகளில் இணை மின் உற்பத்தி தொடங்குவதற்காக மோகனூர் சர்க்கரை ஆலையில் உள்ள இணை மின் உற்பத்தி கூட இயந்திரங்கள் அனைத்தும் கழற்றிக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. தற்போது ஆலையின் தோற்றமே மாறிவிட்டது. ஆலை முழுதும் துருப்பிடித்துதான் உள்ளது. அதனால் புதிதாக அனைத்து இயந்திரப்பாகங்களையும் பொருத்திதான் ஆலையை இயக்க முடியும். இந்த ஆண்டு ஆலையில் இணை மின் உற்பத்தி தொடங்கப்படும்” என்றார்.

x