கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.65 கோடி ரொக்கம் பறிமுதல்


முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2,65,31,650 ரொக்கம், 6.637 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், அரசு நிதி முறைகேடு மூலமாக தனது பெயரிலும் உறவினர்களின் பெயரிலும் சொத்துகளை குவித்திருப்பதாக கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதனடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக தர்மபுரியில் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 53 இடங்கள், சென்னையில் 3, சேலத்தில் 1, தெலங்கானாவில் 1 என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் ரூ.2,88,98,650 ரொக்கம், 6.637 கிலோ கிராம் தங்க நகைகள், 13.85 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் கணக்கில் வராத ரூ.2,65,31,650 ரொக்கம், வங்கிப் பெட்டக சாவி மற்றும் வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கே.பி.அன்பழகனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x