தேனியில் 2 டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு


பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: தேனி மாவட்டம் பிசிபட்டி- பூதிப்புரம் சந்திப்பில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அஜீத் அரபுக்கனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தேனி- பூதிபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திப்பு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாகும். இப்பகுதியில் 20 மீட்டர் தொலைவில் இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் மது அருந்தி வருவோர்களால் இப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மாணவர்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.

இந்த டாஸ்மாக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டியும் மது விற்பனை நடைபெறுகிறது. எனவே பூதிப்புரம் சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்' என கோரி இருந்தார்.

இன்று இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ''இப்பகுதியில் டாஸ்மாக் பிரச்சினை தொடர்பாக 17 வழக்குகள் பதியப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விசாரிக்க தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அவகாசம் கோரியுள்ளார். அவர் தற்போது தான் பிரச்சினை தனது கவனத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இது ஏற்கும்படியாக இல்லை.

எனவே, பழனிசெட்டிப்பட்டி - பூதிப்புரம் சாலை சந்திப்பில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிடப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 28-க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.