யோகியை கோரக்பூரில் எதிர்க்கும் ‘பீம் ஆர்மி’ ராவண்; காங்கிரஸ், சமாஜ்வாதி ஆதரவு கிடைக்குமா?


‘பீம் ஆர்மி’ ராவண்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கோரக்பூரில் எதிர்த்துப் போட்டியிடுகிறார் ’ராவண்’ என்றழைக்கப்படும் சந்திராசேகர் ஆஸாத்(35). பீம் ஆர்மி எனும் தலித் அமைப்பின் நிறுவனரான இவருக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆதரவு கிடைக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

உபியின் மேற்கு பகுதியில் தலித் சமூகத்தின் தலைவராக உருவெடுத்தவர் சந்திராசேகர் ஆசாத். இவர் 4 வருடங்களுக்கு முன் சஹரான்பூரில், தன் ‘பீம் ஆர்மி’ அமைப்பின் சார்பில் நடத்திய ஊர்வலத்தில் தலித் மற்றும் தாக்கூர் சமூகத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் தள்ளப்பட்டார் ஆஸாத். இதன்மூலம் கிடைத்த புகழால், தன் தலித் சமூகத்தின் அடிப்படையில் உபி, மத்திய அரசுகளை எதிர்த்து அரசியல் போராட்டங்களை நடத்துகிறார்.

தொடர்ந்து மார்ச், 2020 இல், புதிதாக ‘ஆஸாத் சமாஜ் பார்ட்டி(ஏஎஸ்பி)’ எனும் பெயரில் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினார் ஆஸாத். தலித்துகளை குறிவைத்து தொடங்கப்பட்டதில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 முன்னாள் எம்பிக்கள், 28 எம்எல்ஏக்கள் இணைந்தனர். உபியின் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டுசேர, அதன் தலைவர் அகிலேஷ்சிங் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு வெறும் 2 தொகுதிகள் தருவதாக அகிலேஷ் கூறியதை ஏற்காத ஆஸாத், தனித்துப் போட்டியிடுகிறார். இன்று தனது ஏஎஸ்பி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆஸாத் வெளியிட்டார். அதில் தாம் உபி முதல்வர் யோகியை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸாத்தை மருத்துவனையில் சந்தித்த பிரியங்கா

இதுகுறித்து ஏஎஸ்பி கட்சி தலைவர் ஆஸாத் கூறும்போது, ‘‘நாம் அம்பேத்கர், கன்ஷிராம் வழியில் பாஜகவையும் அதன் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கையும் எதிர்ப்போம். எனவே, கோரக்பூரில் யோகியை நானே எதிர்ப்பேன். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷுக்கு தலித் வாக்குகள் தேவையில்லை என்பதால் எங்களுக்கு உரிய தொகுதிகள் அளிக்கவில்லை. இதனால், நாம் உபியின் தனித்து போட்டியிட்டுகிறோம்” எனத் தெரிவித்தார். இதனால், உபியில் ஆளும் பாஜக லாபம் பெறும் வாய்ப்புகளே உள்ளன.

உபியின் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முக்கியத் தலைவியாக பகுஜன் சமாஜின் தலைவி மாயாவதி உள்ளார். இவரது கட்சியின் தலீத் வாக்குகள், ஆசாத்தின் ஏஎஸ்பியால் பிரியும் எனக் கருதப்படுகிறது. இதன் மீது ஒருமுறை கருத்து கூறிய முன்னாள் முதல்வர் மாயாவதி, “இதுபோன்ற புதிய கட்சி மற்றும் அமைப்புகளால் தாழ்த்தப்பட்டோருக்கு எந்தப் பலனும் இல்லை. மாறாக, இச்சமூகத்தினரை பிரித்தாளும் கொள்கைகள் கொண்டவர்களே பலன் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால், மாயாவாதி கோரக்பூரில் தனது வேட்பாளரை அறிவிப்பார் எனக் கருதப்படுகிறது.

எனினும், இவருக்கு எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவ்விரண்டு கட்சிகளும் தமது வேட்பாளர்களை கோரக்பூரில் அறிவிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சஹரான்பூர் சிறையிலிருந்து விடுதலையான ஆஸாத், உடல்நிலை பாதிக்கப்பட்டு மீரட் மருத்துவமனையின் சிகிச்சையில் இருந்தார். அப்போது, காங்கிரஸின் தேசிய செயலாளரும், உபி பொறுப்பாளருமான பிரியங்கா, ஆஸாத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோன்ற நல்லுறவு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷிடமும் ஆஸாத்துக்கு உள்ளது.

கோரக்பூர் நகரத் தொகுதியானது 1989 முதல் பாஜக வசம் உள்ளது. 2017 சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 60,000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வென்றிருந்தது. எனவே, கோரக்பூரில் யோகிக்கு போட்டியாக ஆஸாத் இருப்பார் எனக் கருதப்படுகிறது. உபியின் 7 கட்ட தேர்தலில், கோரக்பூரில் மார்ச் 3-ம் தேதி 6-ம் கட்டமாக நடைபெற உள்ளது. இவை அனைத்தின் முடிவுகளும் மார்ச் 10-ல் வெளியாக உள்ளன.

x