மனோகர் பர்ரிகரின் மகனுக்கு அழைப்பு விடுக்கும் அர்விந்த் கேஜ்ரிவால்!


அர்விந்த் கேஜ்ரிவால், உத்பல் பர்ரிகர்

குடும்ப அரசியலுக்கு அரசியல் கட்சிகள் வெளிப்படையாக ஆதரவளிக்கின்றனவோ இல்லையோ, எதிர்க்கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வலைவீசுவதை அரசியல் கட்சிகள் ஓர் அஸ்திரமாகவே பயன்படுத்துகின்றன - வாரிசு அரசியலைத் தொடர்ந்து விமர்சிக்கும் பாஜக உட்பட. ஐந்து மாநிலத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், இந்தப் போக்கு அதிகமாகியிருக்கிறது.

உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பர்ரிகரின் மகனுக்கு, தனது கட்சியில் சேருமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்திருக்கிறார்!

மனோகர் பர்ரிகரின் சொந்தத் தொகுதியான பனாஜியில் (பஞ்சிம் என்றும் அழைக்கப்படுகிறது) அவரது மகன் உத்பல் பர்ரிகர் போட்டியிட விரும்புகிறார் எனச் செய்திகள் வெளியாகின. எனினும், பாஜக அவருக்கு சீட் தர விரும்பவில்லை. அது மட்டுமல்ல, அந்தத் தொகுதியில் போட்டியிட பாஜக தேர்வுசெய்திருக்கும் அதான்சியோ பாபுஷ் மான்செர்ரேட், 2016-ல் ஒரு பதின்பருவச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர். இந்த விவகாரத்தை வைத்து பிற கட்சிகள் பாஜகவை விமர்சித்துவருகின்றன.

“கோவாவில் பாஜகவின் வளர்ச்சிக்கும், அம்மாநில வளர்ச்சிக்கும் மனோகர் பர்ரிகர் ஆற்றிய பங்கு மகத்தானது” என்று கூறியிருக்கும் சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், “அவரது மறைவுக்குப் பின்னர், அவரது குடும்பத்தினர் எதிர்கொண்டிருக்கும் சூழல், கோவா மக்களுக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிரத்தில் உள்ள எங்களுக்கும் வருத்தம் தருகிறது. அவரது மகன் உத்பல் பர்ரிகருக்கு பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்படாதது மட்டுமல்ல, அவர் அவமதிக்கப்படுகிறார். அவருக்கு பாஜக வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்திவந்தார்.

“ஒருவேளை பனாஜி தொகுதியில் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டால், பாஜக அல்லாத கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தக் கூடாது” என்றும் சஞ்சய் ராவத் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கிடையே, கோவாவில் பாஜகவை பலம்பெற வைத்ததில் மனோகர் பர்ரிகரின் பங்கு முக்கியத்துவம் கொண்டதுதான் எனக் கூறியிருக்கும் கோவா மாநில பாஜக பார்வையாளர் சி.டி.வி, “மனோகர் பர்ரிகருக்கு பாஜக எப்போதும் மதிப்பளிக்கும். அதேவேளையில், ஒருபோதும் தனது குடும்பத்தினரைக் கட்சிக்குள் அவர் கொண்டுவரவில்லை. சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்பதைத் தாண்டி அவர் வேறு எதையும் யோசித்ததில்லை. இன்றைக்கு உத்பல் பர்ரிகருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி எல்லாம் பேசுகின்றன. மனோகர் பர்ரிகர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த நேரத்தில் ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால் எல்லாம் என்ன பேசினார்கள் என்பதை மறந்துவிட முடியுமா?” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக என்டிடிவி செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, ஆம் ஆத்மி கட்சியில் இணையுமாறு உத்பல் பர்ரிகருக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்திருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். இதுதொடர்பாக தனது நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் வெளியிடப்போவதாக உத்பல் பர்ரிகர் கூறியிருக்கிறார்.

x