“என் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைக்கு வரலாம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பழகன் உறவினரான சிவகுமார் வீட்டில் நடைபெற்ற சோதனையைப் பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அதிமுகவை அழித்துவிடலாம் என்ற எண்ணத்துடன், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் விடியா திமுக அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால், அதிமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்ற பொய்யான மாயபிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த காவல் துறையை ஏவிவிட்டு திமுக அரசு சோதனை நடத்துகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுக அரசு வழங்கிய பரிசு பொருட்கள் தரமற்று இருந்ததால், பொதுமக்கள் அவற்றை குப்பை தொட்டியில் கொட்டும் நிலையில் இருந்ததை மறைக்கவே இந்த சோதனை.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திராணி இருந்தால், சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்தினால் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றிபெற முடியாது. திமுக அரசு குறித்து யார் கருத்து தெரிவித்தாலும் காவல் துறையை ஏவி சோதனை என்ற பெயரில் மிரட்டப்படுகிறார்கள். எங்கள் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைக்கு வரலாம்” என தெரிவித்தார்.