கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு இறந்துவிட்ட நபர், நேற்று முன்தினம் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக செல்போனில் அவர் பயன்படுத்திய எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள வில்வமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா. 72 வயதான இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால் அவருக்கு கரோனா 2-வது அலையின் போது வைரஸ் தொற்றியது. இதில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு மே 20-ம் தேதி உயிர் இழந்தார். இந்நிலையில்தான், ராஜப்பா 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக, அவர் பயன்படுத்திய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.
ஏற்கெனவே இறந்துவிட்ட நபர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக செல்போனில் வந்த தகவல்கள் அவரது குடும்பத்தினருக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தின. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘தடுப்பூசி போட வருபவர்கள் தங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை வாயால் சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது சிலர் தவறான எண்ணை சொல்லிவிடும் வாய்ப்பு உண்டு. இது அப்படி நடந்த தவறா? அல்லது சம்பந்தப்பட்ட முகாமில் நடந்த தவறா? எனவும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.