ரூ.11.32 கோடி சொத்துக்குவித்த கே.பி.அன்பழகனின் குடும்பம்!


கே.பி.அன்பழகன்

வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள், மருமகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த கே.பி.அன்பழகன் 2016-21ல் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சராக இருந்த காலத்தில் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்ணவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்னர்.

இதைத் தொடர்ந்து கே.பி.அன்பழகன், மகன்களான சந்திரமோகன், சசிமோகன் அவருடைய மகள் வித்தியா மற்றும் அமைச்சருடைய சித்தப்பா வீடு உள்ளிட்ட பாலக்கோடு மாரண்டஅள்ளி உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் காரியமங்கலம் அடுத்த கேரகொடாஅள்ளியில் உள்ள அவர் வீடு மற்றும் அவர்களது உறவினர்கள் என 57 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தர்மபுரி நகரப்பகுதியில் உள்ள அனசாகரத்தில் உள்ள, தர்மபுரி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் இலக்கியம்பட்டி பகுதியிலுள்ள பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அவருடைய சகோதரர் அன்பழகன் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்து வருகிறது. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் நெருங்கிய ஆதவாளர் ஆவார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீட்டில் சோதனை தொடங்கிய அதேநேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் வீட்டில் ரெய்டு தொடங்கியுள்ளது. இந்த சோதனையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

x