பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சியான காங்கிரஸுக்குக் கடும் போட்டியாக இருப்பது ஆம் ஆத்மி கட்சி. பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் அரசை விமர்சிப்பதிலும் கிண்டல் செய்வதிலும் முன்னுக்கு நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியைச் சகட்டுமேனிக்கு விமர்சித்துவருகிறது. தற்போது, முதல்வரின் உறவினர் மீது அமலாக்கத் துறை எடுத்திருக்கும் நடவடிக்கை, இந்த மோதலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது.
சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டபோது, அரசியல் சம்பிரதாயப்படி அவரை வாழ்த்திய அர்விந்த் கேஜ்ரிவால், அதே கையோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்களின் அடிப்படையில் அவரைக் கடுமையாக விமர்சித்துவந்தார்.
இருவருக்கும் இடையில் வார்த்தைப்போர் தடித்துக்கொண்டே வந்தது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், 18 வயதைத் தாண்டிய எல்லாப் பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் தருவதாக வாக்குறுத்தி அளித்த நாளிலிருந்து சரண்ஜீத் சிங் சன்னி தன்னைத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துவருவதாக அர்விந்த் கேஜ்ரிவால் புகார் கூறிவந்தார். “நான் மலிவான ஆடைகளை அணிவதாக முதல்வர் கிண்டல் செய்கிறார். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் வழங்கப்போகும் தொகையைக் கொண்டு பஞ்சாப் சகோதரிகளும் மகள்களும் புதிய ஆடைகளை வாங்கி அணிவார்கள் என்று உறுதிகூறுகிறேன். நான் கறுப்பாக இருப்பதாக முதல்வர் கேலி செய்கிறார். எனது நிறம் கறுப்புதான். நான் ஊர் ஊராகச் சுற்றித்திரிகிறேன். அவரைப் போல நான் ஒன்றும் ஹெலிகாப்டரில் வானில் வலம் வரவில்லை. பஞ்சாபின் தாய்மார்களுக்கு இந்தக் கறுப்பு மகனைப் பிடித்திருக்கிறது. எனது (டெல்லி) ஆட்சி இருண்ட ஆட்சி அல்ல என்று எல்லோருக்கும் தெரியும்” என கேஜ்ரிவால் சீறினார். ஆம் ஆத்மி கட்சியால்தான் பஞ்சாபில் ஸ்திரத்தன்மை கொண்ட, நேர்மையான ஆட்சியை வழங்க முடியும் என்றும் அவர் கூறிவருகிறார். சரண்ஜீத் சிங்கும் அவருக்குப் பதிலடி கொடுத்துவந்தார்.
இந்நிலையில், 2018-ல் பதிவுசெய்யப்பட்ட சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான வழக்கு தொடர்பாக, சரண்ஜீத் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹனி, அவரது உதவியாளர் சந்தீப் குமார் ஆகியோரின் வீடுகளில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், மொத்தம் 10 கோடி ரூபாய் ரொக்கமும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, அர்விந்த கேஜ்ரிவாலுக்கும் சரண்ஜீத் சிங்குக்கும் இடையிலான மோதல் இன்னும் பூதாகாரமாக வெடித்திருக்கிறது.
இந்நடவடிக்கையை, சரண்ஜீத் சிங் சன்னி கடுமையாக விமர்சித்துவருகிறார். 2018-ல் அமலாக்கத் துறை பதிவுசெய்த எஃப்.ஐ.ஆரின் நகலை செய்தியாளர்களிடம் காட்டிய சரண்ஜீத் சிங் சன்னி, அதில் 26 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், தனது மருமகனின் பெயர் அதில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் மீறல் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பாஜகவினருக்கும், அம்மாநிலக் காங்கிரஸாருக்கும் இடையில் வார்த்தை யுத்தமாக வெடித்தது. இந்நிலையில், அந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்தச் சோதனைகள் என்று விளாசித் தள்ளியிருக்கிறார் சரண்ஜீத் சிங் சன்னி.
“மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதே பாணியில் பஞ்சாபில் நெருக்கடியை உருவாக்க அமலாக்கத் துறை முயற்சிக்கிறது. இந்த வழக்கில் எனது பெயரைச் சொல்லச் சொல்லி பூபிந்தர் சிங் ஹனி துன்புறுத்தப்படுகிறார். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்று அவர் கூறியிருக்கிறார்.
“தேர்தல் வரும் சூழலில் இவர்களுக்கு அமலாக்கத் துறை வழக்குகளெல்லாம் நினைவுக்கு வரும். எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அதை எதிர்கொள்வோம். பஞ்சாபிகள் ஒருபோதும் பயப்படுவதில்லை” என்றும் அவர் சூளுரைத்திருக்கிறார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனை விவகாரத்தை முன்வைத்து சரண்ஜீத் சிங் மீது மேலும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துவருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சட்டா, கடந்த டிசம்பர் மாதம் சரண்ஜீத் சிங்கின் சொந்தத் தொகுதியான சம்கோர் சாஹிப் சென்று ஆய்வுசெய்தார். அங்குள்ள ஜிந்தாபூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாகவும் அதில் சரண்ஜீத் சிங்குக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
அதை நினைவுகூர்ந்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், “இது தொடர்பாக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதை நியாயப்படுத்தவும் முயன்றார். முதல்வரும் அவரது குடும்பத்தினரும் சட்டவிரோத மணல் குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான ஒருவரிடமிருந்து பஞ்சாபின் எதிர்காலம் குறித்து எதை எதிர்பார்க்க முடியும்?” என்று விமர்சித்திருந்தார்.
சளைக்காத சரண்ஜீத் சிங் சன்னி, இப்படி குற்றம்சாட்டுவதன் மூலம் பாஜகவின் கரத்தைப் பலப்படுத்துவதாக கேஜ்ரிவாலை விமர்சித்திருக்கிறார். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் அர்விந்த் கேஜ்ரிவால் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
“பாஜக மட்டுமல்ல, கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்சியும் ரிமோட் கன்ட்ரோலும் மோடியிடம்தான் இருக்கிறது. டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டு வந்த பின்னர் சரண்ஜீத் சிங்கும் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார். எனவே, அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் மற்ற எல்லா கட்சியினருக்கும் இடையிலான போட்டியாகவே இந்தத் தேர்தல் இருக்கும்” என ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து பேசிவந்தனர். பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் மீறல் நடந்த சம்பவத்துக்குப் பின்னர், பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான மோதலாகவே, ஓரிரு வாரங்கள் பஞ்சாப் அரசியல் களம் இருந்தது.
தற்போது, பாஜகவை மையமாக வைத்து காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் மல்லுக்கட்டி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மத்தியில், இந்தப் புகைச்சல் மூலம் பாஜகவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதாயம் கிட்டுமா என்பது இன்னொரு கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.