பாவூர்சத்திரம் காமராஜர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு


தென்காசி: பாவூர்சத்திரம் காமராஜர் சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயரத் தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு தமிழகத்த்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கே வியாபாரிகள் ஏலத்தில் காய்கறிகளை வாங்கிச் சென்று வியாபாரம் செய்கின்றனர். தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் இந்த சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறையத் தொடங்கியது. இருப்பினும் காய்கறிகள் விலை உயர்வின்றி இருந்தது. அந்தந்த பகுதிகளில் தேவைக்கு ஏற்ப காய்கறிகள் கிடைத்ததால் விலை உயர்வின்றி இருந்தது. இந்நிலையில், பாவூர்சத்திரம் சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

இன்று ஒரு கிலோ கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும், சாம்பார் வெள்ளரி 22 ரூபாய்க்கும், சுரைக்காய் 10 ரூபாய்க்கும், பூசணிக்காய் 15 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 30 முதல் 60 ரூபாய் வரையும், சேனைக்கிழங்கு 45 முதல் 50 ரூபாய் வரையும், சிறுகிழங்கு 70 முதல் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், சீனி அவரை 45 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 35 முதல் 40 ரூபாய் வரையும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும், தக்காளி 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காய்கறிகள் வரத்து குறைவாக உள்ள நிலையில் தேவை அதிகமாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளதாகவும், பொங்கல் பண்டிகையின் போது இருந்ததை விட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.