தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் தேதி ஜனவரி 22-ம் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் வார்டு வரையறை பிரச்சினைகள் இருந்ததால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஒன்பது மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிப்ரவரி மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு முறைப்படி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணை வெளியாகும். அநேகமாக, ஜனவரி 22-ம் தேதி சனிக்கிழமை, தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.