உத்தரப்பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதன் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் மம்தாவின் தோழமைக் கட்சியாக சமாஜ்வாதி கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக புதிய எதிர்கட்சிகளின் அணிக்கு மம்தா பானர்ஜி முயன்றார். அப்போது தனது முழு ஆதரவை மம்தாவிற்கு அளிப்பதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் அறிவித்திருந்தார். இதற்கும் முன்பாக மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலிலும் மம்தாவிற்கு ஆதரவாக நேரில் சென்று அகிலேஷ் பிரச்சாரம் செய்திருந்தார். இவற்றின் காரணமாக, திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தாவும், சமாஜ்வாதிக்காக உபியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
இது குறித்து சமாஜ்வாதியின் துணைத்தலைவர் கிரண் நந்தா கூறும்போது, ‘மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்த முதல்வர் மம்தாவின் கடும் முயற்சிகள், எதிர்கட்சிகளுக்கானப் பாடம் ஆகும். மம்தாவின் கட்சி உபியில் போட்டியிடாது. சமாஜ்வாதியை ஆதரித்து இங்கு பிரச்சாரம் செய்யும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்காக, பிப்ரவரி முதல் வாரத்தில் உபியின் வாராணசி மற்றும் லக்னோவிற்கு மம்தா வருகை தர உள்ளார். இங்கிருந்தபடி உபி வாக்காளர்களிடம் சமாஜ்வாதிக்கு ஆதரவு கேட்டு, அகிலேஷுடன் இணைந்து டிஜிட்டல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்க உள்ளனர். மம்தாவின் பிரச்சாரத்தால் உபி தேர்தலில் அகிலேஷுக்கு ஆதரவு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2012 குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாம் அல்லது மன்மோகன்சிங்கை முன்னிறுத்த மம்தா முயன்றார். சமாஜ்வாதி தலைவராக இருந்த முலாயம்சிங் யாதவ், இதற்கு ஆதரவளிப்பதாகக் கூறி வந்தார். எனினும், அவர் கடைசிநேரத்தில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்து விட்டார். இதனால், முலாயம்சிங் யாதவ் மீது மம்தா கோபமுற்றார். இருப்பினும் முலாயமின் மகன் அகிலேஷ், மம்தாவிடம் பேசி இருதரப்பினர் இடையிலான நட்புறவை புதுப்பித்தார். அப்போது தொடங்கி அகிலேஷ்சிங், மம்தாவின் செல்லப்பிள்ளையாகி விட்டார்.
இந்த புரிதல்களின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் மம்தா பானர்ஜி மேற்கொள்ளவிருக்கும் விர்ச்சுவல் பிரச்சாரம், அகிலேஷ் யாதவுக்கான ஆதரவு அலையை அதிகரிக்கச் செய்யும் என்றும் சமாஜ்வாதி கட்சியினர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.