அனகாபுத்தூரில் சேதமடைந்த சாலைகள்: தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் 


அனகாபுத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க கோரி, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தாம்பரம்: அனகாபுத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க கோரி, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் பிரதான சாலை மிகவும் குறுகிய நிலையில் காணப்படுவதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுகிறது. இந்நிலையில், மேற்கண்ட சாலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பம்மல் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, அப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் உள்ளது.

ஆனால், சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் உள்ளது. இதனால், சாலை மிகவும் மோசமடைந்து வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதனால், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் மற்றும் குறுகிய சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தேமுதிகவினர் இ்ன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனகாபுத்தூர் பகுதி தேமுதிக செயலாளர் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாலையை சீரமைக்க கோரியும் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான அனகை முருகேசன், பம்மல் நகர செயலாளர் வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


x