திருவள்ளுவரா, திருமலை நாயக்கரா? - கன்ஃபியூஸ் ஆன செல்லூர் ராஜூ


கொள்கையும் கோட்பாடும் பிடிக்கிறதோ இல்லையோ, அதிமுகவின் செல்லூர் ராஜூவுக்கு என்று ரசிகர் பட்டாளம் உண்டு. காரணம், அவரது நகைச்சுவை. சில ஜோக்குகளை அவர் சொல்வார். பல ஜோக்குகள் அவருக்கே தெரியாமல் அவர் வாயிலிருந்துவந்துவிடும். அப்படி புதிதாக ஒரு முத்தை உதிர்த்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.

தைப்பூசத் திருநாளான நேற்று, மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதிமுக சார்பில் மாலை அணிவித்த முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, "மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட சமயத்தில் மஹாலைப் பார்வையிட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள், இவ்வளவு பெரிய அரண்மனையை கட்டிய மன்னருக்கு இங்கு சிலை இல்லையா என்று கூறி இந்தத் திருவள்ளுவர் சிலையை இங்கே நிறுவினார்" என்று சொன்னார். உடனே பத்திரிகையாளர்களும் அருகில் நின்ற கட்சியினரும் சிரித்தார்கள். எதற்குச் சிரிக்கிறார்கள் என்று தெரியாததால், தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட விஷயத்துக்குச் சென்றவர்,

"வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழர் போலவே நடந்துகொள்கிறார் பிரதமர் மோடி. வேட்டி கட்டி தமிழ் கலாச்சாரத்தையும் பிரதிபலித்துவருகிறார். தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை. தமிழர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அவரது அரசு எடுக்கவும் செய்யாது" என்றார்.

x