பொதுவுடமைத் தலைவர் ஜீவானந்தத்தின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. உழைக்கும் ஏழைத் தொழிலாளர் வர்க்கத்திற்கு உரிமைகள் கிடைத்திட அவர் செய்த பணிகள் மகத்தானது. பொதுவுடமைவாதி ஜீவானந்தம் குறித்த அவரது நினைவுநாள் சிறப்புப் பதிவு இது.
‘’காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா- என் தோழனே
பசையற்றுப் போனோமடா” என யதார்த்த வரிகள் மூலம் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் நிலையை படம்பிடித்து காட்டியவர் அமரர் ஜீவானந்தம்.
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி கிராமத்தில் பட்டத்தார் பிள்ளை_உமையம்மாள் தம்பதிக்கு 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி மகனாகப் பிறந்தார் ஜீவானந்தம். கிராமதெய்வமான சொரிமுத்து அய்யனாரின் பெயரையே சொரிமுத்து என மகனுக்கு சூட்டினர் பெற்றோர். ஆனால், அதையெல்லாம் உதறி, பொதுவுடமைத் தலைவர் ஜீவாவாக வாழ்க்கை ஓட்டத்தில் வந்து நின்றவர். இடதுசாரிகளுக்கோ தோழர் ஜீவா.
9-ம் வகுப்பு படிக்கும்போதே காந்தியையும், கதரையும் மையப்படுத்தி கவிதை எழுதிய ஜீவா, ஒருகட்டத்தில் காந்தியடிகளால், ‘’நீங்கள் தான் இந்தியாவின் சொத்து’’ என பாராட்டப்பெற்றவர். இளமைக் காலத்திலேயே வெள்ளையரை எதிர்த்துக் குரல் எழுப்பிய இவர், பெரியார் பாசறையிலும் வளர்ந்தவர். காலப்போக்கில் கம்யூனிச கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு முழுநேர கம்யூனிசவாதியாக மாறிய ஜீவா தான், தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி. ஜீவா அடிக்கடி தன் பெயரை மாற்றிக்கொள்வது வழக்கம். இதைப் பார்த்துவிட்டு அவரது உறவினர்கள், “இப்படி அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டே இருக்காதே... பின்பு, சொத்து விஷயங்களில் குழப்பம் வரும்” என புத்தி சொன்னார்கள். ஜீவாவோ, “குத்துக்கல்லுக்கு சொத்து எதற்கு?” என அதை எளிதாகக் கடந்தார்.
குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடியதிலும் இவரது பங்களிப்பு பெரியது. குன்றக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் காந்தி ஆசிரமத்தை தோற்றுவித்தது, உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றது என காலத்தால் மறக்கமுடியாத வரலாறுகளையும் தனதாக்கியவர் ஜீவா.
பகத்சிங்கின் ’நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற நூலை தமிழாக்கம் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறையில் கழித்தது மட்டும் 10 ஆண்டுகள். தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் பிறந்தவர், 1952-ல் சென்னையில் வண்ணாரப்பேட்டை தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ப.ஜீவானந்தம் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது நினைவாக நாகர்கோவில் நகரின் மையப்பகுதியினான அண்ணா பேருந்து நிலையம் அருகில் பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தத்திற்கு மணிமண்டபம் அமைத்துள்ளது தமிழகஅரசு. ஆண்டு தோறும் அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் இங்குள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.