குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறாதது குறித்த காரணங்களை மாநில அரசுகளிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.
இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். "தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், தமிழக ஊர்தி இடம்பெறுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது. ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை. வல்லுநர் குழுதான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.