கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதற்கான அபராத வசூல், ரூ.3 கோடியை நெருங்கியுள்ளது. அதேபோல் தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 10 லட்சத்தை நெருங்குகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதால், 3-வது அலையில் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள 475 பள்ளிகளில் 15 முதல் 18 வயது வரையில் மொத்தம் 74,165 குழந்தைகள் பயில்கின்றனர். அவர்களில் 71,703 பேருக்கு இதுவரை கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இம்மாத இறுதிவரை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் முழு இலக்கை எட்ட முடியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 11,94,465 பேர் முதல்கட்ட தடுப்பூசியும், 9,12,293 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். அதேநேரத்தில் படித்தவர்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில் கடும் மெத்தனப் போக்கு நிலவுகிறது. அந்தவகையில் இதுவரை 1,31,188 நபர்கள் இதுவரை கரோனா விதிமுறைகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது ஆகிய காரணங்களுக்காக 2 கோடியே 84 லட்சத்து 66,862 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘முதல் இரு அலைகளை ஒப்பிடுகையில் குமரி மாவட்டத்தில் அநேகம்பேர் தடுப்பூசி போட்டுவிட்டதால், இந்த அலையில் மருத்துவமனைத் தேவைப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இப்போது குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,499 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் அரசு மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் 59 பேரும், கோவிட் கண்காணிப்பு மையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலுமாக 221 பேர் உள்ளனர். 1,219 பேர் வீட்டுச் சிகிச்சையில் உள்ளனர். வீட்டிலேயே ஓய்வு எடுத்து, தனிமையில் இருக்கும் அளவுக்கு கரோனா மாறியிருப்பதற்கு தடுப்பூசியே காரணம். மிச்சம் இருக்கும் மக்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.