இம்சை அரசன் காமெடி: ஜி டிவிக்கு நோட்டீஸ்


தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாநிலத் தலைவர், பி.எஸ்.டி.புருஷோத்தமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜி தமிழ் தொலைக்காட்சி கடந்த 15-ம் தேதி, ஏற்கெனவே நடத்திவரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக “23-ம் புலிகேசி” வடிவேலு பாணியில் 2 சிறுவர்களைக் கொண்டு நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நகைச்சுவையாக நடந்த நையாண்டி நிகழ்ச்சியைக் கூட, நகைச் சுவையாக எடுத்துக்கொள்ளத் தெரியாத, தமிழ்நாடு பா.ஜ.க ஐ.டி.விங் தலைவர் நிர்மல் குமார், பெங்களூரில் உள்ள ஜி பொழுதுபோக்கு சேனலின் தென்னிந்திய தலைமை அதிகாரி சிஜூ பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 15.1.22 அன்று ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடியின் செயல்பாடுகளை10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைக் கொண்டு கிண்டல் செய்துள்ளார்கள். இதுகுறித்து, உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கேட்டுள்ளார்.

மேலும் இதன் நகல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனுக்கும் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில், நேற்று(17.1.2022) ஒரு கடிதத்தை, மத்திய ஒலிபரப்புத் துறை உ.பி மாநிலம் நோய்டாவில் உள்ள ஜி டி.வியின் நிர்வாகிக்குஅனுப்பி, “ஜி தமிழ் ஒளிபரப்பிய நிகழ்ச்சி குறித்து,1வாரத்துக்குள் விளக்கம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் ஜி டிவி மீது நடவடிக்கை எடுப்போம்” என அச்சுறுத்தி உள்ளது.

இந்த மிரட்டல் கடிதத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் நன்றி தெரிவித்து மகிழ்கிறார். இப்படி அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, மிரட்டி ஊடகங்களை மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயல்பட வைக்கும் போக்கை, டி.யூ.ஜெ. வன்மையாக கண்டிப்பதுடன், ஜி டிவியிடம் விளக்கம் கேட்கும் கடிதத்தை உடனடியாகத் திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தமிழக பா.ஜ.க தலைவர்களின், தூண்டுதல்,பா.ஜ.க. மத்திய அமைச்சரை வைத்து, ஊடக-கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் இந்த செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், பா.ஜ.க தூண்டுதலில், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் மத்திய அரசின் தகவல் ஒலி பரப்புத் துறை, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மாறி, கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஜி தமிழ் தொலைக்காட்சிக்கு எதிரான மத்திய அரசின் தவறான நடவடிக்கைக்கு எதிராக, ஒற்றுமையுடன் போராட முன்வருமாறு, தமிழக ஊடகவியலார்களை டி.யூ.ஜெ. அழைக்கிறது”. இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

x