மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 205 நாட்களுக்கு பிறகு 50 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. தற்போது, குடிநீர் தேவைக்காக, காலை 6 மணி முதல் விநாடிக்கு 2,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்ததாலும், கர்நாடக அரசு மாதந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், நீர்வரத்து குறைந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி நிறுத்தப்பட்டது. அப்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 163 கன அடியாகவும், நீர்மட்டம் 30.90 அடியாகவும் இருந்தது. காவிரி கரையாக மக்களின் குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அதன்படி, அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 207 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 137 கன அடியாக சரிந்துள்ளது. கடந்த 86 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் 50.16 அடியில் இருந்து 49.95 அடியாக குறைந்துள்ளது.
அதேபோல், நீர் இருப்பு 17.91 டிஎம்சியில் இருந்து 17.79 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது. காவிரி கரையோர மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, கடந்த மே 1-ம் தேதி காலை முதல் 1,400 கன அடியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், மே 7-ம் தேதி காலை முதல் 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று காலை முதல் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.