உயர்த்தப்பட்ட மின் நிலை கட்டணத்தை திரும்பப் பெறுக: தமிழக அரசுக்கு ‘டாக்ட்’ கோரிக்கை


கோவை யில் நடந்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டாக்ட்) நிர்வாகிகள் கூட்டம்

கோவை: உயர்த்தப்பட்ட மின் நிலை கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெற ஆவன செய்யவேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டாக்ட்) சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டாக்ட்) நிர்வாகிகள் கூட்டம் கோவை இடையர்பாளையத்திலுள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.‘டாக்ட்’ கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கோவை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற கணபதி ராஜ்குமாருக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தக் கூட்டத்தில், உயர்த்தப்பட்ட மின் நிலை கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை முதல்வரின் கவனத்துக்கு தொழில் அமைப்புகளின் சார்பில் கொண்டு செல்வது. 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெற ஆவன செய்யவேண்டும்.

தமிழக மின்சார வாரியம் ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணத்தை 6 சதவீதம் வரை உயர்த்தி கொள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், ஜூலை மாதத்தில் மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. குறு, சிறு தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைக்க வேண்டும். மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசு குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்கும் போது வழங்கி வந்த 15 சதவீதம் மானியத்தை கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தியுள்ளது. தமிழக அரசு வழங்குவதை போல் அதை 25 சதவீதமாக உயர்த்தி மீண்டும் வழங்க வேண்டும்.

தொழில்முனைவோர் வங்கிக் கடனை மூன்று மாதங்கள் தொடர்ந்து செலுத்தத் தவறினால் ‘சர்ப்பாஸ்’ சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை போல் காலக்கெடு ஆறு மாதங்களாக மாற்ற வேண்டும். இந்தப் பிரச்சினைகள் குறித்து கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழில்முனைவோருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.