சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும்கட்சியான திமுக இதற்கு முனைப்புடன் தயாராகி வருகிறது. நகராட்சி, மாநகராட்சிப் பதவிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிப் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை, தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவிப் பட்டியலினப் (பொது) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோக கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளும் பெண்களுக்கே ஒதுக்கீடு (இது அனைத்து சாதியினருக்கும் பொதுவானது) செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுவது, இதுவே முதல்முறையாகும்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்குத்தான் என்று சில நாட்களுக்கு முன்பாக தகவல் கசிந்தது. இதில் ஆளும்கட்சியினர் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் பேசப்பட்டது. ஆனால், இப்படி மொத்தமாக 11 மாநகராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கே கொடுக்கப்படும் என்று ஆளும்கட்சியினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று பேச்சு எழுந்துள்ளது.