மேட்டுப்பாளையம்: அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை தொடங்கி வைப்பு


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய நந்தவனம் பவானி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் இந்த நந்தவனம் உள்ளது. இங்குள்ள மயானத்தின் அருகில் இந்த நந்தவனம் உள்ளது.

இந்நிலையில், அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் இலவச அமரர் ஊர்தி அர்ப்பணிக்கும் நிகழ்வு இன்று நந்தவன வளாகத்தில், சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் கலந்து கொண்டு இலவச அமரர் ஊர்தி சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் கூறும் போது, ”அனைத்து இந்து சமுதாய நந்தவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் இலவச அமரர் ஊர்தி சேவையை இன்று துவக்கி வைத்துள்ளோம். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டால் அமரர் ஊர்தி சேவையுடன், 25 சேர்கள் சாமியான பந்தல், ஃப்ரீசர் பாக்ஸ், டீ கேன் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.