உபியில் ஆட்சி மாற்றங்களுக்கு காரணமானவரின் கட்சி தனித்துப் போட்டி


ராஜா பையா

உத்தரப் பிரதேசத்தில் 6 முறை சுயேச்சை எம்எல்ஏவாக இருந்து மாநில அமைச்சரானவர் ராஜா பையா. பல ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக இருந்தவரின் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

உபியின் கிரிமினல் அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பவர், பிரதாப்கர் பகுதியில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த ராஜா பையா என்றழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப்சிங். இவர் இங்குள்ள கோண்டா தொகுதியில் 1993-ம் ஆண்டு முதல் சுயேச்சையாக வெற்றிபெற்று வருபவர். ஆளும் கட்சிகளில் சேராமலே அதன் அமைச்சரவையில் இடம்பெறுபவர்.

இவர் தனது 25 வருட அரசியல் வாழ்வைக் கொண்டாடும் வகையில், கடந்த 2018-ல் ‘ஜன்சத்தா தளம் லோக்தாந்திரிக்’(ஜேடிஎல்) எனும் பெயரில் புதிய கட்சி தொடங்கினார். தனிக்கட்சி தொடங்கிய பின், ராஜா பையாவை சீண்ட, இம்முறை உபியில் கட்சிகள் இல்லாமல் போனது. இதனால், உபி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது ராஜா பையாவின் கட்சி.

ராஜா பையா

இதுகுறித்து ஜேடிஎல் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளரான சைலேந்தர் சரோஜ் டெல்லியில் கூறும்போது, ‘‘உபியில் எங்கள் கட்சி 100 வேட்பாளர்களை போட்டியிட வைக்க உள்ளது. விவசாயிகளுக்கானப் பாசனத்துக்கு மின்சாரம் இலவசமாக அளித்து, பழைய ஓய்வூதிய முறையை அமலாக்குவோம். பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான காப்பீடும் அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜா பையாவின் பின்னணி

லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்ற ராஜா பையா, பலமுறை வகுப்புகளுக்காக பிரதாப்கரிலிருந்து தனது சிறியரக தனிவிமானத்தில் வந்திறங்கினார். பிறகு இதே விமானத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியபோது, அதில் கோளாறு ஏற்பட்டதால் நடுரோட்டில் இறங்கி சர்ச்சையானது. இளம்வயதிலேயே அரசியலில் குதித்து சுயேச்சை எம்எல்ஏவானவர் ராஜா பையா. சுயேச்சையாகவே தொடர்ந்து வென்று வருபவரது ஆதரவின்றி, உபியில் அரசுகள் ஆட்சி செய்வது கடினம் என்ற நிலை இருந்தது.

ராஜா பையா

விடுதலையாகி நேரடியாக சிறைத் துறை அமைச்சர்

உபியில் தனித்த எம்எல்ஏவாக இருந்து பாஜக, மாயாவதி, முலாயம்சிங் யாதவ் உள்ளிட்டோரின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்த்தவர் ராஜா பையா. உபி அரசியலில் அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர்போன இவருக்கு, மாயாவதியுடன் கடும் அரசியல் மோதல் உருவானது. இதனால், மாயாவதி முதல்வராக இருந்தபோது, ராஜா பையா மற்றும் அவரது தந்தை உதய் பிரதாப்சிங்கை 2002-ல் பொடா சட்டத்தில் கைது செய்தார். இதற்கு அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஏகே-47 துப்பாக்கி காரணம் காட்டப்பட்டது. இதனால், 562 நாட்கள் ஜெயிலில் இருந்த ராஜா பையா, அடுத்துவந்த அகிலேஷ்சிங் ஆட்சியில் சிறையில் இருந்து விடுதலையாகி நேரடியாக சிறைத் துறையின் அமைச்சராகப் பதவி ஏற்றார்.

எதிர்ப்பவர்களை இரையாக்க முதலைகள்?

பிரதாப்கரில் நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க பொதுமக்கள் காவல் நிலையத்தை விட, அதிகமாக ராஜா பையாவையே அணுகுவார்கள். அவர் அங்கு அக்கால ராஜாக்களின் தர்பார்களைப் போல் நடத்தி கட்டப்பஞ்சாயத்து செய்வார். பிரதாப்கரின் ராஜாவாகக் கருதப்படும் அவர் போட்டதுதான் அங்கு சட்டம். இவரது அரண்மனை வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளத்தில் முதலைகள் வளர்ப்பதாகவும், இவைகளுக்கு தன்னை எதிர்ப்பவர்களை வீசி இரையாக்குவார் எனவும் சர்ச்சைகள் உண்டு. பிறகு, இதை மாயாவதி அரசுடமையாக்கி சுத்தம் செய்தபோது அதில் பல எலும்புக் கூடுகள் சிக்கின.

போட்டியிட கட்சியில் ஆளில்லை

தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை அடித்தளமாகப் பயன்படுத்தி அரசியலில் குதித்தவர் ராஜா பையா. தாம் கைகாட்டி அரசியல்வாதிகளை ஜெயிக்க வைப்பதை விட, தாமே கட்சியை தொடங்கி தேர்தலில் நிற்க முடிவு செய்திருந்தார். ஆனால், தற்போது இவரது கட்சியில் போட்டியிட எவரும் முன்வரவில்லை. இதனால், வெறும் 16 பேர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார் ராஜா பையா.

x