பொங்கல் திருநாளையொட்டி தனியார் டிவியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில், பள்ளிச் சிறுவர்கள் இருவர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மற்றும் அவரது அமைச்சர் மங்குனி ஆகியோரைப் போல வேடமிட்டு, காமெடி செய்திருந்தார்கள். அதில் 23-ம் புலிகேசியின் கதாபாத்திரமானது, அப்படியே பிரதமர் மோடியை பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை திமுக எம்பி செந்தில்குமார், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் ட்விட்டரில் பகிர, அவை வைரலாகிவிட்டன. வாட்ஸ்அப் குழுக்களிலும் அந்த வீடியோ சுற்றிக்கொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, அதே ட்விட்டரிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் அந்தப் பையன்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. “பிரதமர் மோடிஜி அவர்களை கிண்டல் செய்த குழந்தைகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பால்வாடிகள் முன் போராட்டம் நடத்துவோம்” என்றும், “தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மோடியின் மாண்பைக் குறைக்கும் விதத்தில் பேசிய விவகாரத்தில் பங்குபெற்ற குழந்தைகள், அதைப் பார்த்து சிரித்த நடிகை சிநேகா, நிகழ்ச்சித் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், “பிரதமரைக் கிண்டல் செய்தால் அந்தச் சேனலே இருக்காது” என்றும் அண்ணாமலை சொன்னதாக, முன்னணி செய்தி நிறுவனங்களின் பெயரைத் தாங்கிய அந்த நியூஸ் கார்டுகள் தெரிவித்தன.
இதை தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை மறுத்துள்ளார். “இது திமுக ஐடி விங்க் மற்றும் அறிவாலயத்தின் தரத்தைக் காட்டுவதாக” கண்டித்துள்ள அண்ணாமலை, அந்த போலியான நியூஸ் கார்டுகளையும் பகிர்ந்துள்ளார். இதையும் இணையவாசிகள் வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தகவலை அவர் மறுத்திருக்கலாம். ஆனால், அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு.முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு, தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்களின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்!" என்று பதிவிட்டிருப்பதற்குத்தான் இவ்வளவு கேலிகள் இணையத்தில் நடக்கின்றன என்பதை அண்ணாமலை உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுவது இன்னொரு பக்கம் சின்ன அரசியல் கேலியைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல் கொந்தளிப்பதை நம்முடைய அரசியல்வாதிகள் என்று கைவிடப் போகிறார்களோ தெரியவில்லை.