ஈத்தாமொழி தென்னை, நாகர்கோவில் கோயில் நகைகள், கன்னியாகுமரி கிராம்பு வரிசையில் குமரி மாவட்டத்தின் தோவாளை கிராமத்தில் மட்டுமே பிரத்யேகமாகக் கட்டப்படும் ‘மாணிக்க மாலை’க்கு, புவிசார் குறியீடு பெறும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை கிராமம் மலர்களால் புகழ்பெற்றது. இங்கு நூற்றாண்டைக் கடந்த பழமையான மலர் சந்தையும் உள்ளது. இங்குள்ள பெண்கள் பலரும் பூ கட்டும் தொழிலில் இருக்கிறார்கள். வழக்கமான பூ கட்டும் தொழிலில் இருந்து மாறுபட்டு, தோவாளை கிராமத்தில் மட்டும் ‘மாணிக்கமாலை’ என்னும் கலைநுட்பமான பூ கட்டும் தொழிலும் இருக்கிறது. வழக்கமான பூ கட்டுவதில் இருந்து மாறுபட்டு இது தையல் வடிவில் இருப்பதால், இந்த மாணிக்கமாலை கைவினைக் கலைகளின் பட்டியலில் இருக்கிறது.
அண்மையில் சீனப்பிரதமர் ஜின்பிங் இந்தியா வந்தபோது, அவரும் பிரதமர் நரேந்திர மோடியும் மகாபலிபுரத்தில் நம் இந்திய மண்ணின் கலைகளைப் பார்வையிட்டனர். அப்போது, அவர்கள் முன்பு தோவாளையைச் சேர்ந்த வனிதா ஸ்ரீ, மாணிக்க மாலையைக் கட்டினார். அதன்பின்பே மாணிக்கமாலையின் சிறப்புகள் குறித்து, குமரி மாவட்டம் கடந்தும் வெளி இடங்களுக்குத் தெரியவந்தது. இப்போதும், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு தோவாளையில் இருந்தே தினமும் மாணிக்கமாலை செல்கிறது.
இத்தகு சிறப்புவாய்ந்த தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கேட்டு, புவிசார் குறியீடு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவருமான சஞ்சய் காந்தி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். கலைஞர்கள் மூலம் இவருக்கு வரப்பெற்ற மனுக்களின் அடிப்படையில், இதை இவர் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘மாணிக்கம் போலவே இந்த மாலை தோற்றம் அளிக்கும். வெள்ளை, சிவப்பு அரளிப்பூக்களை சம அளவில் கட்டுவதால், இது மாணிக்கம் போல் இருக்கிறது. இந்தப் பூக்கள் தமிழகம் முழுவதுமே விளைந்தாலும், தோவாளையில் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு மட்டும்தான், சரியான கலை நுணுக்கத்தோடு, மடிப்புத்தன்மை மாறாமலும், பூக்கள் சேதமாகாமலும் கட்டும் நுட்பம் இருக்கிறது. இதனால் கைவினைக் கலைஞர்கள் இதற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதை அனுமதிக்கக் கேட்டு தாக்கல் செய்துள்ளேன். இதுபோல் கும்பகோணம் வெற்றிலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளோம்’’ என்றார்.