40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கோவாவில், பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கவிடுக்கிறது. மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்படும்.
இந்நிலையில், கோவா தேர்தலில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதை சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் அறிவித்திருக்கிறார். மகாராஷ்டிரத்தின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் சிவசேனாவுடன், காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் (என்சிபி) அங்கம் வகிக்கின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “தொகுதிப் பங்கீடு குறித்து ஜனவரி 18-ல், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரஃபுல் படேலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பிறகே, இரு கட்சிகளும் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெளிவாகும்” என்று கூறினார்.
மேலும், “இரு மாநிலங்களிலும் அரசியல் சூழல் வெவ்வேறானது. எனினும், கோவாவில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனியாகப் போட்டியிட காங்கிரஸ் முடிவுசெய்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
கோவாவில் காங்கிரஸ் தனியாகக் களம் காண்பதால், அக்கட்சியால் ஒற்றை இலக்க எண்ணிக்கையைத் தாண்டி வெற்றி பெற முடியாது என்று சஞ்சய் ராவத் விமர்சித்திருந்தார். அதேபோல், காங்கிரஸ் தனியாகப் போட்டியிடுவதன் மூலம் பாஜகவை வீழ்த்த முடியாது என்று திரிணமூல் காங்கிரஸும் கூறியிருந்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என்று கூறப்பட்ட நிலையில், இந்தக் கூட்டணியை சிவசேனா இறுதிசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.