ஆவின், மின்சாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறியிருந்தவர் விஜய் நல்லதம்பி. அதிமுக நிர்வாகியாக இருந்த இவரது புகாரின் அடிப்படையில்தான் ராஜேந்திர பாலாஜி அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், விஜய் நல்லதம்பி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இவர் மீது சாத்தூர் ரவீந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி பாணியிலேயே உடை அணிந்துகொண்டு அவருக்கு நெருக்கமான உதவியாளராக இருந்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டவர் விஜய் நல்லதம்பி. அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் இவர் பணம் வாங்கி மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. அவற்றில் சாத்தூர் ரவீந்திரன் கொடுத்த புகாரும் ஒன்று.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது, தான் 30 லட்சம் ரூபாய் வாங்கவில்லை என்றும்; 3 ரூபாய் வாங்கியதாகவும் விஜய் நல்லதம்பி சொன்னதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தப் பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்ததாக அவர் சொன்னதாகவும் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை பாய்ந்தது.
விஜய் நல்லதம்பி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.