புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் வேகம் கவலைதரும் விதத்தில் இருக்கும்போதிலும், அதைப்பற்றிக் கவலைகொள்ளாமல் அரசு நிர்வாகம் முடங்கிக்கிடப்பதாக அங்குள்ள மக்கள் கண்ணீர் விடுகிறார்கள்.
மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு, புதுச்சேரியில் தொற்று பாதிப்பு புதிய உச்சம் பெற்றிருக்கிறது. ஜனவரி 8-ம் தேதி 279 ஆக இருந்த தொற்று பாதிப்பு, அடுத்த நாளே 444 ஆக உயர்ந்து, கடந்த 11-ம் தேதி 655 ஆக வளர்ந்துவிட்டது. அன்றைய நிலவரப்படி, 6 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
இப்படி மிக வேகமாக புதுவையில் கரோனா பரவி வரும் நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய புதுச்சேரி அரசோ, ‘பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லை’ என்று அறிவித்திருக்கிறது. இது மண்ணின் மைந்தர்களை பேரதிர்ச்சி அடையவைத்துள்ளது. முதல்வர் ரங்கசாமியும், துணைநிலை ஆளுநர் தமிழிசையும் இதைப்பற்றி எல்லாம் கவலை இல்லாமல், அவரவர் இருப்பை உறுதிசெய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள் மக்கள்.
655 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட அன்றுதான் மண்பானைசெய்யும் இடத்துக்குச் சென்று, தானும் மண்பானை செய்து பார்த்தார் ஆளுநர் தமிழிசை. அதற்கும் முதல்நாள், “பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை” என்று அறிவித்ததும் அவரேதான்.
“இந்தியா முழுதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்திருந்த நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தாராளமாக அனுமதியளித்தார் துணை நிலை ஆளுநர்.
அதனால், வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து குவிந்தார்கள். இதனால் புதுச்சேரியில் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. சாலைகளும் வாகனங்களால் மூச்சுத் திணறின. அன்று மட்டும் வெளியூர்க்காரர்கள் 12 லட்சம் பேர் புதுவையில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அத்தனை லட்சம் பேர் கூடியதன் விளைவைத்தான், இப்போது புதுச்சேரி மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
18 முதல் 35 வயதுவரையுள்ள இளைஞர்கள்தான் புதுச்சேரியில் தற்போது அதிகமாக தொற்றுக்கு ஆளாகிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இவர்கள் வீதிக்கு வந்துபோனதும் இதற்கு முக்கிய காரணம். இத்தனை நடந்த பிறகாவது சுதாரித்துக் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, பொங்கல் கொண்டாட்டங் களுக்கும் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதுச்சேரியைத் தாராளமாய் திறந்து விட்டிருக்கிறார்கள். இதனால் புதுச்சேரி மக்கள் என்ன ஆவார்களோ என்று அச்சமாக இருக்கிறது” என்று கவலைப்படுகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளர் சரவணன்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. எப்போதும் எதிலும் தமிழகத்தை அப்படியே பின்பற்றும் புதுச்சேரி அரசு, இம்முறை அப்படிச் செய்யாமல் எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்துவருகிறது.
புதுச்சேரியில் ‘கோவிட் மேலாண்மைக் குழு’வின் அவசரக் கூட்டம் அண்மையில் கூடியது. கண்டிப்பாக அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘’வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அது தேவையில்லை. அதற்குப் பதிலாக, மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் பொங்கல் விழா கொண்டாடத் தடை இல்லை என்றாலும் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை முடிவெடுத்து அறிவித்தார்.
இப்படிக் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என தமிழிசை அறிவித்துக் கொண்டிருக்க, முதல்வர் ரங்கசாமியோ தனக்கு இதில் எதுவும் சம்பந்தமில்லை என்பதுபோல இருக்கிறார். காலையில் எழுந்தால் உடற்பயிற்சி, விளையாட்டு, பிறகு குளியல், சிற்றுண்டி. அதன்பின்னர் கிளம்பி அப்பாசாமி கோயிலுக்குப் போய்விட்டு, அப்படியே தலைமைச் செயலகம் போகிறார். அங்கு சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு கிளம்பி தான் வழக்கமாக அமரும் வாட்ச் கடைக்கு வந்து ரிலாக்ஸ்ட்டாக அமர்ந்து விடுகிறார்.
ஏற்கெனவே, மழையால் பாதித்த மக்களுக்கு ரங்கசாமி அறிவித்த நிவாரணத் தொகையை கொடுக்கமுடியாதபடிக்கு தமிழிசையும் பாஜகவும் முட்டுக்கட்டை போட்டார்கள். பாஜகவைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் டெல்லி சென்று பேசிய பிறகே, அதற்கான தொகை விடுவிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கலுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க உத்தரவிட்டதோடு தனக்கான கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் ரங்கசாமி, கரோனா பரவல் குறித்த கவலையே துளியும் இல்லாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பாஜகவைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயமோ, பாஜக சார்பில் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்து கிரிக்கெட், கபடி என விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கபடி, கிரிக்கெட் என பாஜக தினம் தினம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளைக் காணவும் பங்குபெறவும் மக்கள் கூடுவதால், அதை முன்னிட்டும் வஞ்சகமில்லாமல் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
இதுமட்டுமில்லாமல் பிரதமரை அழைத்து இளைஞர் விழாவையும் நடத்த திட்டமிட்டிருந்தார்கள். பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டு காணொலி காட்சிமூலம் நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்ததால் அதிகக் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது. என்ஆர் காங்கிரஸ் சார்பிலும் அவர்கள் பங்குக்குத் தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகிறார்கள்.
கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தாமல் இருப்பது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் பேசினோம். ‘’பிரதமர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன். அது முடிந்ததும் முதல்வரிடம் ஆலோசனை நடத்திவிட்டு இதுகுறித்துப் பேசுகிறேன்” என்று மட்டும் சொன்னார்.
“தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஜனவரி 31 வரை வணிக வளாகங்கள், கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி கிடையாது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவை, திரையரங்குகள், மதுபான கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சுற்றுலாவையும், வணிகர்களையும் மையப்படுத்தி பொங்கல் கொண்டாட்டங் களுக்கு மட்டும் கடுமையான வழிகாட்டு விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று அறிக்கை தருகிறார்கள் புதுச்சேரி அரசு அதிகாரிகள்.
கட்டுப்பாடுகளை பெயரளவுக்கு விதித்துவிட்டு, கதவுகளை தாராளமாகத் திறந்துவிடுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பது, மருத்துவம் படித்த புதுவையின் துணைநிலை ஆளுநருக்கு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை!
படங்கள்: எம்.சாம்ராஜ்