சென்னை: தொலைபேசி ஒட்டுகேட்பு ரகசியங்களை வெளியிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து 7ஆண்டுகள் கழித்து அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், சவுக்கு சங்கர் 4 வாரத்தில் பதில்அளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழக அரசின் ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்தின் ரகசிய பிரிவில் சிறப்பு உதவியாளராக 2008-ம் ஆண்டு பணியாற்றிய சவுக்கு சங்கர், அங்கு இருந்த சில தொலைபேசி ஒட்டுகேட்பு ரகசியங்கள் அடங்கிய உரையாடல்களை திருடி சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக சென்னை சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் காவல்துறை தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 7 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை விசாரணை நீதிமன்றம் முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை. ரகசிய உரையாடல்களை பதிவு செய்த பென்-டிரைவ் சவுக்கு சங்கருக்கு சொந்தமானது. அதில் இருந்த ரகசியங்களை திருடி வெளியிட்டது அவர்தான். விசாரணை நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ளாமல் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. எனவேஅவரை விடுதலை செய்து பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உரிய தண்டனை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஎம்.தண்டபாணி, இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தரப்பில் 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.