மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக கருதி இடஒதுக்கீட்டில் சலுகை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராகக் கருதி இடஒதுக்கீட்டில் சலுகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான அனுஸ்ரீ, உயர் நீதிமன்றத்தில் 2018-ம்ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

கடந்த 2005-06-ம் ஆண்டு 10-ம்வகுப்பும், 2007-08-ல் 12-ம் வகுப்பும்,கடந்த 2012-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பொறியியல் படிப்பும் முடித்துள்ளேன். கடந்த 2017-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பிரிவில் நேர்முகத்தேர்வு இல்லாத பணிகளுக்கான போட்டித்தேர்வில் பங்கேற்று 121.50 கட்-ஆஃப் மதிப்பெண்ணாக பெற்றேன்.

சிறப்பு பிரிவுக்கான கட்-ஆஃப்மதிப்பெண் 90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதித்துவிட்டு, மூன்றாம் பாலினத்தவரான என்னை மட்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவி்ல்லை. எனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு என்னை அனுமதித்து அரசுப்பணி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். கார்த்திகேயன், ‘‘பொறியியல் பட்டதாரியான மனுதாரர் சிறப்பு பிரிவுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணைவிட கூடுதலாகபெற்றும், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அவரை சிறப்பு பிரிவாகக் கருதவில்லை’’, என வாதிட்டார்.

டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.ஹேமா மற்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு ப்ளீடர் டி.சீனிவாசன் ஆகியோர், ‘‘மனுதாரர் தன்னை பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் எனக் கூறி இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் பாலினத்தை மட்டும் மூன்றாம் வகுப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்ததேர்வி்ல் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கட்-ஆஃப்மதிப்பெண் 222 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 121.50-ஐ கட்-ஆஃப் மதிப்பெண்ணாக கொண்டுள்ள மனுதாரர் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட வில்லை’’ என வாதி்ட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன்இந்த வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த சமூகத்தில் வேறு மாதிரியான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும்போது அதில் மனுதாரரைப்போல வெகுசிலர் தங்களது கல்வித் தகுதியை வளர்த்துக்கொண்டு, இதுபோன்ற போட்டித்தேர்வுகளில் பங்கேற்று தேவையான மதிப்பெண்கள் பெற்றாலும்அவர்களுக்கு எந்தவொரு இட ஒதுக்கீடும் வழங்கப்படுவதில்லை.

இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் மூன்றாம் பாலினத்தவர்கள் வாழ்க்கை திசைமாறி அசாதாரண சூழலுக்கு தள்ளப்பட்டுவிடுவர். மூன்றாம் பாலினத்தவர்களை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ கருதாமல் அவர்களை பிரத்யேக சிறப்பு பிரிவாகக் கருதி உரிய இடஒதுக்கீடு சலுகைகளை வழங்க வேண்டுமென பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் அந்த தீர்ப்புகள் ஆட்சியாளர்களால் மதிக்கப்படுவதில்லை.

சமூக சமநிலை உருவாகும்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு முறையும் தங்களுக்கான உரிமையை நீதிமன்ற படிகள்ஏறி நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்துக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கென தனி இடஒதுக்கீடு இல்லை. எனவே மூன்றாம் பாலினத்தவர்களை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ கருதாமல் அவர்களை சிறப்புப் பிரிவாக கருதிசலுகை அளிக்க வேண்டும். அப்போதுதான் சமூக சமநிலை உருவாகும்.

அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் அமைப்புகளும் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வரையறை செய்துதனியாக விதியை உருவாக்க வேண்டும். எதிர்காலத்திலும் மூன்றாம்பாலினத்தவர்களுக்கு இதுபோன்றஇக்கட்டான சூழல் உருவாகக்கூடாது.

எனவே கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மனுதாரரை சிறப்பு பிரிவாகக் கருதி அவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்க வேண்டும். ஒருவேளை அந்த தேர்வுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால் 2022-ம் ஆண்டுக்கான தேர்வில் மனுதாரருக்கு முன்னுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாகக் கருதி அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது’’ என உத்தரவிட்டுள்ளார்

x