வைரலாகும் செங்கரும்புக் காளை


பொங்கல்

செங்கரும்புகளால் செய்யப்பட்ட காளை உருவமும், அதை வைத்துப் பொங்கல் கொண்டாடிய குடும்பத்தினரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகின்றன.

இன்று தை 1, தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் தைப்பொங்கல் திருநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. அவற்றில், காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் கொண்டாடிய பொங்கல், இன்றைக்கு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படும் செய்தியாக மாறியிருக்கிறது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்கதிர்பூர் கிராமத்து விவசாயி செந்தில்குமார், தனது குடும்பத்தினருடன் வீட்டில் இன்று காலை பொங்கல் கொண்டாடினார். அப்போது, செங்கரும்புகளைக் கொண்டு அச்சு அசலாக ஜல்லிக்கட்டு காளை போன்ற உருவத்தைச் செய்து வைத்திருந்தார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டு காளை உருவத்துக்கும், கதிரவனுக்கும் படையலிட்டுப் பொங்கலைக் கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையின் சிறப்பையும், விவசாயத் தொழிலில் அழிந்துவரும் காளை மாடுகளின் பயன்பாட்டை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், இப்படி ஒரு வித்தியாசமான முயற்சி செய்து பொங்கல் கொண்டாடியதாக கூறும் செந்தில்குமார், விவசாயிகளையும், விவசாய தொழிலையும் எப்போதும் உயர்வாகவே கருத வேண்டும், அதற்கான உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் அனைவரும் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடுகளுடன் புதுப்பானையில் பொங்கல் வைத்து, தனது குடும்பத்தினருடன் வித்தியாசமான வகையில் தை பொங்கல் பண்டிகையை கொண்டாடிய செந்தில்குமாரை, ஊர் மக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வியந்து பாராட்டினர். செங்கரும்பு காளைமாடுகளை கிராம மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.

x