சென்னையில் 70 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், 5 மாநில தேர்தலுக்கு பிறகு விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்களும் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வந்ததால் அதன் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனிடையே, உபி, மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு திடீரென குறைத்தது. இது வாகன ஓட்டிகளை சற்றே ஆறுதல் அடைய வைத்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்தே விலை குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
அதே நேரத்தில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைத்து வாகன ஓட்டிகளை ஆச்சரியப்பட வைத்தார். இந்த விலை குறைப்பு குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 70-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.