வெறிச்சோடும் கட்சி விளம்பர சாதனச் சந்தை; தேர்தல் பிரச்சாரத் தடையால் ரூ.10,000 கோடி இழப்பு


கட்சி விளம்பர சாதனங்கள்

டெல்லியில் கட்சி விளம்பரச் சாதனங்களின் சந்தை வெறிச்சோடிக் கிடக்கிறது. பிரச்சாரக் கூட்டங்களுக்கானத் தடையால் ரூ.10,000 கோடி இழப்பாகும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரச் சாதனங்கள் தயாரிக்கும் பல சிறியத் தொழில்கள் நடைபெறுகின்றன. இதில் பலர் பணியாற்றுகின்றனர். குடிசைத் தொழிலாளிகளான இவர்கள், கட்சிகளின் கூட்டங்களுக்குத் தேவையான சுவரொட்டிகள், சிறிய, பெரிய கொடிகள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து வாங்கி, வியாபாரிகள் டெல்லியின் பிரபல சதர் பஜாரில் தனியாக ஒரு சந்தையே நடத்தி வருகிறார்கள்.

இங்கிருந்துதான் வட மாநிலங்கள் அனைத்துக்கும் கட்சிகளுக்கான விளம்பரச் சாதனங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால், ஆண்டுதோறும் வியாபாரம் நடைபெறும் இந்தச் சந்தையில் தேர்தல் சமயங்களில் பெருங்கூட்டமாக வியாபாரம் சூடுபிடிக்கும். ஏற்கெனவே, கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்தச் சந்தையின் வியாபாரிகள் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்புக்காகக் காத்திருந்தனர். ஆனால், அந்த அறிவிப்புடன் சேர்த்து பிரச்சாரக் கூட்டங்களுக்கானத் தடையும் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ‘காமதேனு’ இணையத்திடம் சதர் பஜாரின் வியாபாரிகள் கூறும்போது, ‘‘பிரச்சாரக் கூட்டங்களின் தடை நீட்டிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், எங்களுக்கு இந்தமுறை சுமார் பத்தாயிரம் ரூபாய் வரையிலான இழப்பு ஏற்படும். இதன் லாபம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினருக்கு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் விளம்பரச் சாதனங்கள் பெற, இந்த வியாபாரிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டிருந்தனர். கரோனா பரவலால் இவையும் முடிவுக்கு வந்துவிட்டன. இதற்கு முன் தேர்தல் பிரச்சாரங்களுக்காக குறைந்தபட்சம் 45 நாட்களுக்கான கால அவகாசம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்து வந்தது. இதுவும் இப்போது ஒரு மாதமாகக் குறைந்து விட்டதாகவும் இந்த வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் வெளியான தேர்தல் அறிவிப்பில் முடிவுகளுக்குப் பின் வெற்றி ஊர்வலம், கூட்டங்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தாக்கமும் விளம்பரச் சாதனங்கள் விற்பனையில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்களும் வேலை இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இது, தேர்தல் அறிவிப்புக்குப் பின் சரியாகி விடும் என்ற நம்பிக்கையும் இந்தமுறை அவர்களுக்கு கைவிடும் சூழலை உருவாக்கி விட்டிருக்கிறது.

x