ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன்


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பணமோசடி வழக்கில் கடந்தவாரம் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஜன.5-ம் தேதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று வாரங்களுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தநிலையில், கைது செய்யப்பட்டார்.

பணமோசடி வழக்குகளில் தனக்கு ஜாமீன் கேட்டு, கடந்த டிச.17-ம் தேதியே அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியிருந்தார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்துத் தேடிய விருதுநகர் காவல் துறை, கடந்த வாரம்தான் அவரைக் கைது செய்தது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு அளித்திருந்தார். அது இன்றைய விசாரணையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

x