பொங்கல் பரிசு ரூபாய் 5,000 எங்கே?


குமரியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பல்வேறு சர்ச்சைகளுக்கும் தூபம் போட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு புளியில் பல்லி கிடந்ததாகச் செய்தி பரவிய நிலையில், பொங்கலுக்குப் பரிசுத்தொகை கிடைக்காததை அரசியல் ஆக்கி குமரி மாவட்டம் முழுதும் போஸ்டர் ஒட்டியுள்ளது பாஜக.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முந்தைய அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகையாக 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், கரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். பொங்கல் பரிசுத்தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இப்போது திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் எதுவும் வழங்கப்படவில்லை. அதேநேரம் கரும்பு முதல் புளி வரையாக 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இது பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியது.

ஏற்கெனவே, பொங்கலுக்கு விநியோகிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் இருந்த புளியில், இறந்து போன பல்லி இருந்ததாக புகைப்பட ஆதாரத்துடன் புகார் கிளம்பியது. பரிசுப் பொருள் விநியோகத்தில் இந்தி திணிப்பு இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார். எங்கள் ‘ஆட்சியில் பரிசுத்தொகை கொடுத்தோம். திமுக அதைச் செய்யவில்லை’ என அதிமுகவும் குற்றம்சாட்டிவருகிறது.

இப்போது பாஜக வலுவாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், குட்டிச் சந்துகளைக்கூட விட்டுவைக்காமல், ‘பொங்கல் பரிசு ரூபாய் 5000 எங்கே?’ என போஸ்டர்கள் மாவட்ட பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே மக்கள் பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காத விரக்தியில் இருக்கும் நிலையில், பாஜகவின் இந்த போஸ்டர் அரசியல் பெரும் கவனம் குவித்துவருகிறது.

x