பொங்கல் தொகுப்பில் பல்லி? - போலீஸ் நடவடிக்கைக்கு ஆளானவரின் மகன் தீக்குளித்து தற்கொலை!


குப்புசாமி

அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகக் குற்றம்சாட்டிய திருத்தணி அதிமுக பிரமுகர் நந்தன் மீது, போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்த நிலையில், தனது தந்தை மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்ததால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி நந்தனின் மகன் குப்புசாமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (36). இவர், சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன், அதிமுக திருத்தணி 15-வது வட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, நந்தன் தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதில் இருந்த புளியில், இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதை நந்தன் தனது உறவினர்களிடம் தெரிவித்தாராம். இதனால் இந்த விஷயம் ஊருக்குள் வேகமாக பரவியது.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகச் சொல்லி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, நந்தன் மீது திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, தந்தை மீது போலீஸார் பொய்வழக்குப் போட்டிருப்பதாக குப்புசாமி புலம்பினாராம். இது தனக்கு அவமானமாக இருப்பதாகவும் சொன்னவர், நேற்று (ஜன.11) பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதில் உடல் முழுவதும் தீக்காயம்பட்ட குப்புசாமியை திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குப்புசாமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ததால், அவமானம் தாங்காமல் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் அதிமுகவினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

x