வாழ்வா சாவா போராட்டத்தில் பாமக!


பாட்டாளி மக்கள் கட்சி, அதன் 33 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நலிவடைந்து நிற்கிறது. இதற்கு முன் கட்சி வீழ்ந்தபோதெல்லாம் தவறுகளைச் சரிசெய்து அதை மீட்டெடுத்த மருத்துவர் ராமதாஸ் இப்போது, சிலுவையில் அறையப்பட்ட பிறகு ஏசு கெஞ்சியதைப் போல, "ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கூட்டத்துக்கு கூட்டம் தன் சொந்த சமூகத்தினரிடம் நீதி கேட்கிறார். இது பலனளிக்குமா?

புரட்சிகர பாமக

வன்னியர் சமூக முன்னேற்றத்துக்காக 1980-களில் ஊர் ஊராய்ப் பயணித்து, அம்மக்கள் கொடுத்த கூழையும் கஞ்சியையும் குடித்துப் பணியாற்றியவர் ராமதாஸ். அக்காலத்தில் அவர் நிஜ புரட்சியாளராக, மீட்பராகவே கருதப்பட்டார். தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொல்லி, அரசியல், பொருளாதார பலன்களை எதிர்பார்க்காமல் ராமதாஸ் உழைத்த உழைப்புக்கு நிகராக, கடந்த 30 ஆண்டுகளில் திமுக, அதிமுகவில்கூட சட்டென ஒரு தலைவரைச் சொல்வது கடினம். இடஒதுக்கீட்டுக்காக அவர் நடத்திய போராட்டம், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது.

‘எம்பிசி’ என்ற இடஒதுக்கீட்டுப் பிரிவு உருவாவதற்கு காரணகர்த்தாவான அவர், வன்னியர் சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியபோதுகூட அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய கட்சியாகவே அதை வடிவமைத்தார். பாமகவின் முதல் பொதுச் செயலாளராக வள்ளிநாயகம் என்ற பட்டியலினத்தவரையே நியமித்தார். வன்னியர்களுடன் சேர்ந்து, பட்டியலின மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்ததுடன், ஊருக்கு ஊர் அம்பேத்கர் சிலைகளைத் திறந்த வரலாறும் ராமதாசுக்கு உண்டு. சமூக நீதியும், சமத்துவமும்தான் கட்சியின் கொள்கை என்ற அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்காகப் போராடுவதே பாமகவின் லட்சியம் என்றார். தொடக்க காலங்களில் அதைச் செய்தும் காட்டினார்.

தேர்தல் களத்தில் பாமக

பாமக தொடங்கிய 6 மாதத்தில் வேலூர் மாவட்டம் பெரணமல்லூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் போட்டியிட்டு, தேர்தல் பாதையில் பயணிக்கத் தொடங்கியது அக்கட்சி. அப்போது சுமார் 22 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதுதந்த உற்சாகத்தால், 1989 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பாமக, 33 தொகுதிகளில் போட்டியிட்டு 6 சதவீத வாக்குகளைப் பெற்று கூட்டணியின் அவசியத்தை உணர்ந்தது.

1991 சட்டப்பேரவை, நாடாளுமன்ற பொதுத்தேர்தலை தன் தலைமையில் சிறுகட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்திச் சந்தித்த பாமக, பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் வெற்றியைப் பதிவுசெய்தது. 1996-ல் திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், திவாரி காங்கிரசுடன் கூட்டணி. 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, 1999 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி. 2001 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியதும், மின்னல் வேகத்தில் அதிமுக கூட்டணிக்கு மாறியது. 2006-ல் மீண்டும் திமுக கூட்டணி. இடையில் மத்திய கூட்டணியிலும் மாற்றம் என மாறிக்கொண்டே இருந்த பாமக, இந்த காலகட்டங்களில் தனது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றிக் கொண்டது. அந்தச் சாதனைகளைப் பற்றி தனி கட்டுரையே எழுதலாம்.

அடுத்தடுத்த கூட்டணி மாற்றங்களையும் எழுதினால், கட்டுரை நீண்டுவிடும். கூட்டணி மாற்ற அரசியலால் கெட்டபெயர் வாங்கிய ராமதாஸ், 2004-ல் வாரிசு அரசியலிலும் விழுந்தார். 2016 தேர்தலில் தன் மகனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தனியாக களம் கண்டார். அப்போது அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும்கூட, சதவீத அடிப்படையில் கொஞ்சம் கவுரவமான ஓட்டுகளே பாமகவுக்கு கிடைத்தன. இதனால், “அதிமுக அமைச்சர்கள் எல்லாம், ஒரு மண்ணும் தெரியாதவர்கள், ஜெயலலிதாவின் கார் டயரை நக்கியவர்கள்" என்று பேசியதை எல்லாம் மறந்துவிட்டு, 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. அந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அக்கட்சி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது.

இன்றைய பாமக

இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்காக மீண்டும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியிருக்கும் பாமக, மறுபடியும் திராவிடக் கட்சிகளையும், தேசியக் கட்சிகளையும் விமர்சிக்கிறது என்றாலும், பழைய வீரியம் இல்லை. தனது சாதனையாக பாமக கூறிவந்த வன்னியர் உள்ஒதுக்கீட்டுச் சட்டம் ரத்தானபோது, தேர்தலுக்காக ஈபிஎஸ் போட்ட நாடகத்தில் ஏமாந்துவிட்டார் ராமதாஸ் என்ற அவப்பெயரையும் ஏற்படுத்தியது.

கரோனா காலத்தில் எல்லா அரசியல் தலைவர்களும் களமிறங்கி வேலை செய்தபோது, தந்தையும் மகனும் அளவுக்கு அதிகமாகப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார்கள். பேத்தியின் திருமணத்துக்குக்கூட கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ராமதாஸ் அழைக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால், வன்னியர்கள் மத்தியிலேயே அக்கட்சிக்கு நல்ல பெயர் இல்லை என்று பேசப்படலானது.

திமுக, அதிமுகவைவிட அதிகமாக மாவட்டங்களைப் பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ள பாமக, அந்த மாவட்டச் செயலாளர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி மாற்றப்படுகிற ஒவ்வொருவரும் 10 பேரை கூட்டிக்கொண்டு வேறு கட்சிக்குப் போய்விடுகிறார்கள். ஏற்கெனவே பண்ருட்டி ராமச்சந்திரன், வேல்முருகன், காடுவெட்டி குரு குடும்பம் உட்பட பாமகவின் முகமாக இருந்தவர்கள் எல்லாம் வெளியேறிக்கொண்டே இருக்க, கீழ்மட்ட நிர்வாகிகளும் விலகுவது கட்சியை பலவீனப்படுத்தியிருக்கிறது.

எழுச்சியூட்டுமா?

இந்தச் சூழலில்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் புதிய உத்தியைக் கையாளுகிறார் ராமதாஸ். “நான் இன்னும் சில ஆண்டுகள்தான் இருப்பேன். என்னைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று அவர் பேசுவது எடுபடுகிறது. ஆனால், “என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?” என்று அவர் பேசுவது, பொருத்தமற்றதாக இருக்கிறது. அவரை ஏற்றுக்கொண்டவர்கள்தான் கூட்டத்துக்கு வருகிறார்கள். அவர்களைக் குறை சொல்வதும், திட்டுவதும் எப்படி கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கேட்கிறார்கள் வடமாவட்ட பத்திரிகையாளர்கள். “நான் மட்டும் பிறக்காவிட்டால் வன்னியர் சமுதாயம் கடைக்கோடியில் நின்றிருக்கும்” என்ற அவரது பேச்சும் அப்படித்தான் பார்க்கப்படுகிறது.

‘தொண்டர்களுடனான தனிப்பட்ட உறவை ராமதாஸ் இழந்துவிட்டார்’ என்ற குற்றச்சாட்டை போக்குவதற்காக, புதிய உத்தியைக் கையாள்கிறார் ராமதாஸ். அதாவது, கட்சியைச் சேர்ந்த யாராக இருந்தாலும் தங்கள் குடும்ப உறுப்பினரின் பிறந்தநாளுக்காக மரம் நட்டுப் புகைப்படம் அனுப்பினால், அதை தன்னுடைய முகநூலில் பதிவிட்டு பாராட்டுவதுடன், நேரடியாக அவர்களுக்குப் போன் போட்டும் வாழ்த்து சொல்கிறார் ராமதாஸ். கடந்த ஒரு மாதத்தில் இப்படி சுமார் 500 பேருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் அவர். அப்படி வாழ்த்து பெற்றவர்களில் சின்னஞ்சிறு குழந்தைகளும் உண்டு. மூன்றாம் தலைமுறையினருடனும் உறவைத் தொடர்வதன் மூலம், வன்னியர்களை கட்சியில் தக்கவைக்க முடியும் என்பது அவரது கணக்கு.

பல மாவட்டங்களில் பாமக தூங்கி வழிவது உண்மைதான் என்றாலும், அக்கட்சிக்கு எம்எல்ஏக்கள் இருக்கிற மாவட்டங்களில் கட்சி வேலைகள் களை கட்டுகின்றன. உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக கொஞ்சம் சாதித்துவிட்டது என்றால், அடுத்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் வரையில் உள்ளூர்களில் அரசியல்செய்ய ஆட்களுக்குப் பஞ்சமிருக்காது.

ஆனால், தற்போது வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறது பாமக. “அன்புமணி ராமதாஸ்தான் கட்சியை அஸ்தமிக்க வைப்பார் என்று நினைத்தோம். ஆனால், அந்த வேலையை ராமதாஸே செய்துமுடித்துவிடுவார் போல் தெரிகிறது” என்று பாமகவின் எதிரிகள் சொல்லிவந்தார்கள். இப்போது ராமதாஸின் அவசர சிகிச்சையும், அவரது கட்சி எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் பாமகவின் ஆயுளை நீட்டிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

பாமக தனது கொள்கைகளில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டாலும், சமூக நீதித் தளத்தில் அது இன்னும் உறுதியாகவே இருக்கிறது. அரசியல் செய்ய அந்த உறுதிமட்டும் போதாது என்பதை, மருத்துவர் ஐயாவும் அவரது மகனும் புரிந்து கொண்டால் நல்லது.

x