ராமநாதபுரம்: பரமக்குடியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்து, தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடர் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அங்கிருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில், “கிராமப்புறங்களில் அமைக்கப்படும் கிராம சாலைகள் மற்றும் நபார்டு மூலமாக வழங்கப்படும் சாலைகளுக்கு பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை லஞ்சம் பெறுவதால் சாலைகள் முறையாகவும், தரமாகவும் அமைக்கப்படுதில்லை. சில கிராமங்களில் சாலை அமைக்காமலே அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு சாலை அமைத்ததாக ஒப்பந்த பணத்தை வழங்கி மோசடி செய்கின்றனர்” என தெரிவித்தார்.