பொங்கலையொட்டி ஜன.17-ம் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில், வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாட ஏதுவாகவும், ஜனவரி 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், வரும் 18-ம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப் பெற்றன.
அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த அரசு, வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 29-ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.