தனது பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை கோரி நடிகர் சூர்யா சார்பில், 2டி நிறுவனம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது பாராட்டுகளை அறிக்கையாக வெளியிட்டனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா பெயரிலும் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த அறிக்கையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தத் தீர்ப்பு கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்றும், இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி நடிகர் சூர்யாவின் கையெழுத்துடன் அறிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் தனது டிவிட்டரில், சூர்யா பெயரில் போலியான அறிக்கை உலவி வருவதாகவும், அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் துணைத் தலைவர் மனோஜ் தாஸ், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், ‘சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.