தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 346 காவலர்கள் கரோனாவால் பாதிப்பு


கரோனா வைரஸ்

தற்போதைய கரோனோ 3-வது அலையில் காவல் துறையில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இதுவர 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 346 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரவலின்போது முன்களப் பணியாளர்களில் முக்கிய பங்கு வகிப்போர் காவல் துறையினர். ஒவ்வொரு அலையின் போதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் கரோனா பரவலைத் தடுக்க களத்தில் நின்று பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இதுவரை 8,030 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 3-வது அலையில் காவல் துறையினர் மத்தியிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட காவல் துறையைச் சேர்ந்த 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் முதல் இன்றுவரை 4 காவலர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒருநாள் மட்டும் தமிழக காவல் துறையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கூடுதல் ஆணையர் உட்பட 70 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

அரசு அறிவுறுத்தலின்படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் உள்ள அனைத்து காவலர்களும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தத் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 2 தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 9 மாதம் முடிவுற்ற காவலர்களுக்கு இன்றுமுதல் உடனடியாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

x