ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் @ கோவை


கோவை: புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கோவை ஆட்சியர் அலுவல வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரங்கநாத மூர்த்தி தலைமை தாங்கினார்.

இது குறித்து நிர்வாகிகள் கூறும்போது, "தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் தமிழக அரசாணையை மதிக்காமல், சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணத்தில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே அனுமதிப்பதை கண்டிக் கிறோம்.

இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட்டு, ஆசிரியர்களின் விருப்பப்படி முன்பு இருந்ததுபோல் வருமான வரி செலுத்திட அரசு
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அ.தங்கபாசு, மாவட்ட பொருளாளர் ராஜாத்தி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

x