தேர்தல் தோறும் இந்துக்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக சிறுபான்மையினரை விமர்சித்து, மதநல்லிணக்கத்தை குலைத்து ஆதாயம் தேடுவது உத்தரப்பிரதேசத்தின் அரசியல் வரலாறாகி வருகிறது. அதை இந்த முறையும் இந்துத்துவா அமைப்பினர் தொடங்கி நடத்தி வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.
இம்முறை நெருங்கும் சட்டப்பேரவை தேர்தலில் இந்த மத நல்லிணக்கம் குலைப்பு, பிரதமர் நரேந்தரமோடியின் மக்களவை தொகுதியான வாராணசியில் நிகழ்ந்துள்ளது. ஆன்மிக நகரான வாராணசியின் கங்கை கரைகளில் ‘இந்து அல்லாதவர்கள் பிரவேசிக்கத் தடை’ என்ற தலைப்புடன், இரண்டு தினங்களாக சுவரொட்டிகள் காணப்படுகின்றன. இந்த சுவரொட்டியின் கீழ், ‘கோயில்களும், கங்கையின் கரைகளும் சனாதன தர்மத்தின் சின்னங்கள். இந்த சனாதனம் மீது நம்பிக்கை கொண்டவர்களை வரவேற்கிறோம். மற்றவர்களுக்கு இது சுற்றுலாத்தலம் அல்ல’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதன் கீழ் பகுதியில், ‘இது கோரிக்கை அல்ல, எச்சரிக்கை!’ எனவும் குறிப்பிட்டு, அதன் கீழ் ’விஷ்வ இந்து பரிஷத் - பஜ்ரங் தளம் - காசி’ என எழுதப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் தேர்தல் சமயத்தில் மதநல்லிணக்கத்தை குலைக்கும் முயற்சி என காசி எனும் வாராணசிவாசிகள் கருதுகின்றனர். இதனால், கங்கைக் கரை பகுதியின் பேர்ல்பூர் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்யாமலே விசாரணையை தொடங்கி உள்ளது. முதல் நடவடிக்கையாக சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, சுவரொட்டிகள் குறித்த செய்திகள் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியானதோடு, சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இவற்றில் இடம்பெற்ற படக்காட்சிகளில் இரண்டு பேர் அந்த சுவரொட்டிகளை ஒட்டும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. வேறுவழியின்றி, இப்பிரச்சனையில் வாராணசி காவல்துறை ஆணையர் ஏ.சதீஷ் கணேஷ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதில், சுவரொட்டி ஒட்டும் படங்களில் இருந்த இருவரும் ராஜன் குப்தா மற்றும் நிகில் திரிப்பாதி என அடையாளம் காணப்பட்டனர்.
இவ்விருவரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்ததில், குப்தா என்பவர் விஷ்வ இந்து பரிஷத்தின் நிர்வாகி எனவும், திரிபாதி என்பவர் பஜ்ரங் தளத்தின் நகர அமைப்பாளர் எனவும் தெரிய வந்துள்ளது. இவர்களது பதவிகளை அந்த இரண்டு அமைப்புகளிடம் உறுதிசெய்யக் கோரி கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து இருவரும் வாராணசியின் கூடுதல் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த இருவர் மீதும் 107/16 சிஆர்பிசியின் பிரிவு பதிவானதால், அவர்கள் தலா ரூ.5 லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்துக்களுடன் முஸ்லீம்களும் இணைந்து வாழும் வாராணசி, மதநல்லிணக்கத்திற்கும் பெயர் போனதாக உள்ளது. இந்நகரின் பெரும்பாலானவர்கள் முக்கிய தொழிலான பட்டுச்சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் உற்பத்தியில் முஸ்லீம்களும், அவற்றின் சந்தைக்கான விற்பனையில் இந்துக்களும் இடம் பெற்றுள்ளனர். இதன் காரணமாக வாராணசியின் இந்து மற்றும் முஸ்லீம்களின் உறவு என்பது பட்டுசேலைகளில் உள்ள ’தானா பானா கா ரிஷ்தா(ஊடுபா எனப்படும் குறுக்கும் நெடுக்குமாக இணைந்த பிரிக்க முடியாத நூல் போலான உறவு)’ எனக் கூறுவது உண்டு.
இந்நிலையில், 2014 மக்களவை தேர்தலுக்கு பின் வாரணாசியில் இந்துத்துவாக்களின் போக்கு தீவிரம் அடைந்தது. காசி விஸ்வநாதர் கோயிலிலும் இந்துத்துவாவினரின் தலையீடு துவங்கி இருந்ததாகப் புகார் எழுந்தது. இது, 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி உபியில் அமைந்த பின் மேலும் அதிகமானது. எனினும், இதனால் சில பகுதிகளில் சற்று பதட்டம் நிலவியதே தவிர மதக்கலவரம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு, மதநல்லிணக்கக் குலைப்புக்கு வாராணசி நகரவாசிகள் இடையே ஆதரவு இல்லை என்பதும் காரணமானது.
இதன் தாக்கமாக வாரணாசியில் வரலாற்று பின்புலத்திலிருந்து நிலவி வந்த காசிவிஸ்வநாதர் கோயில் பிரச்சனையும் அண்மையில் முடிவுற்கு வரும் சூழல் ஏற்பட்டது. இதில், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி தனது நிலத்தின் ஒரு பகுதியை தானமாக அளித்தது. அதேபோல், இதற்கு ஈடாக காசி விஸ்வநாதர் கோயில் சார்பிலும் ஒரு பகுதி நிலம் மசூதிக்கும் அளிக்கப்பட்டு விட்டது. இவை தொடர்பாக இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே சமாதானப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அதன் பலன் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தின் விரிவாக்கப் பணியின்போது வெளிப்பட்டது. ரூ.339 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தையே பிரதமர் நரேந்தர மோடி கடந்த வருடம் டிச.13 அன்று திறந்து வைத்திருந்தார்.
மதக்கலவரங்களுக்கு பெயர் போன பல நகரங்கள் உபியில் உள்ளன. இவை தான் தேர்தல் சமயங்களில் இந்துத்துவா அமைப்புகள் சிலவற்றின் இலக்குகளுக்கு ஆளாகி வந்தன. எனினும், சமீப காலமாக மதக்கலவரங்கள் உபியில் குறைந்துள்ளன. இதற்கு அம்மாநில மக்கள் தம் மதநம்பிக்கைகளை அரசியலில் இருந்து விலக்கத் தொடங்கி இருப்பதை காட்டுகிறது. எனவே, இம்முறை நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் கட்சிக்கான வெற்றியாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.