தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததுடன், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் ஆகியோருக்கான கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அரசிடமிருந்து எதிர்மறையான சமிக்ஞைகள் வராததை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளை உற்சாகமாக அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வந்துள்ளனர். மேலும் மாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை, ஜல்லிக்கட்டு போட்டிக்கான இதர ஏற்பாடுகள் ஆகியவற்றில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்பார்த்தது போலவே, கரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதுவே எருதுவிடும் போட்டியாக இருப்பின் அதிகபட்சம் 150 பேர் பங்கேற்கலாம், போட்டிக்கான வீரர்கள், மாட்டின் உரிமையாளர், அவரது உதவியாளர் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய முறையில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டை பெற்றிருப்பதும் அவசியம். இதனை 3 நாள் முன்னதாகவே முடித்திருப்பதும் முக்கியம்.
மாடுபிடிவீரர்கள், மாட்டின் உரிமையாளர், உதவியாளர் ஆகியோர் 2 டோஸ் தடுப்பூசியுடன், 2 நாள் முன்னதாக உறுதி செய்யப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்பிப்பதும் அவசியமாகிறது. இவர்களுடன் கலந்துகொள்ளும் பார்வையாளர்கள் 2 டோஸ் கரோனா தடுப்பூசி போட்டிருப்பதும் கட்டாயமாகிறது. இவற்றுக்கு அப்பால் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அரசு வகுத்துள்ள வழக்கமான விதிமுறைகளையும் அனைவரும் பின்பற்றுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இவர்களுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரும் கரோனா விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக, இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக போட்டிகளை காணுமாறும் அரசு அறிவித்துள்ளது.