சென்னையில் கூடுதல் ஆணையர் உட்பட 70 காவலர்களுக்கு கரோனா


கரோனா பரவல் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகப் பணிபுரியும் காவலர்களில், கூடுதல் ஆணைய உட்பட 70 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 3-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஒருபக்கம் ஒமைக்ரான் வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் சுமார் 13 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

ஊரடங்கில் பொதுமக்கள் விருப்பம்போல் வெளியே சுற்றுவதைக் கட்டுப்படுத்த முன்களப் பணியாளர்களாக, காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக காவல் துறையினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பெண் கூடுதல் ஆணையர் உட்பட 70 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காவலர்கள் யாரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், உடனடியாக தகவல் அளிக்குமாறு காவல் துறையினருக்கு சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

x