செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்; பிரதமர் திறந்து வைக்கிறார்


பிரதமர் நரேந்திர மோடி

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக சென்னை, பெரும்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தனி வளாகத்தை ஜன.12-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 அக்.12-ம் தேதி தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர், 2005 ஜூலையிலிருந்து தமிழ் மேம்பாட்டுக்கான மையத் திட்டம், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழுக்கு பங்காற்றிய அறிஞர்களை சிறப்பித்தல், தமிழ் மேம்பாட்டு வாரியம் அமைத்தல், செம்மொழி உயராய்வு மையம் தொடங்குதல், தமிழில் ஆய்வு மேற்கொள்வோருக்கு உதவித்தொகை அளித்தல் ஆகியவை தமிழ் மேம்பாட்டுக்கான மையத் திட்டத்தின் கூறுகளாக உள்ளன.

செம்மொழித் தமிழாய்வு மையம், 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் மைசூரில் தொடங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு ஆக.13-ல் புது டெல்லியில் நடைபெற்ற நிதிக்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்றை சென்னையில் நிறுவ முடிவு செய்யப்பட்டு, 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.76.32 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் முதல், சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் இந் நிறுவனத்துக்கென தனியாக பெரும்பாக்கத்தில் வளாகம் கட்டும் பணியும் தொடங்கியது.

தற்போது, பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குளிர்சாதன வசதியுடன் கட்டுமானப் பணிகள் முடிந்திருக்கின்றன. இந்த, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ஜன.12-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x