இனி தரமற்ற சாலைகள் போடப்படுமா? -தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் நள்ளிரவில் சோதனை


தலைமச் செயலாளர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்

தரமற்ற சாலைகளைப் போட்ட ஒப்பந்ததாரர்களை அவர்களின் செலவிலேயே சீர்செய்ய வைத்திருக்கிறது உள்ளாட்சி அமைப்புகள் நடுவமும், மாநிலத் தகவல் ஆணையமும். அந்த உத்தரவுகள் முறைப்படி நிறைவேற்றப்படுகின்றனவா என்று தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையரும் இரவில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முருகேஷ், கடந்த அதிமுக ஆட்சியின்போது 2017, டிச.6-ம் தேதி தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில், ‘பசுமைவழிச் சாலை கேசவப் பெருமாள் முதன்மைச் சாலையை சீரமைக்க வேண்டும்’ என்று புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த நடுவம், ‘‘சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதுகுறித்த தகவலைக் கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் முருகேஷ் அளித்த மனு, ‘‘பொதுத் தகவல் அதிகாரி பதில் அளிக்காததால் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என கோரி தமிழக மாநில தகவல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு. முத்துராஜ், ‘‘மனுதாரர் புகார் அளித்த நாளில் இருந்து மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் வீதம், 27 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க’’ தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும், ‘‘கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியில் சரியாக அமைக்கப்படாத சாலைகளை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அவரவருடைய சொந்த செலவிலேயே சரிசெய்ய வேண்டும்’’ என்று சென்னை மாநகராட்சிக்கு, உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன்படி அடையாறு பகுதியில் சில சாலைகளை ஒப்பந்ததாரர்கள் சீர் செய்யும் பணிகளை, தலைமச் செயலாளர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு நேரத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஏற்கெனவே என்னென்ன குறைகள் இருந்தன, தற்போது என்னென்ன மறுசீரமைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களை ஒப்பந்ததாரரிடமே கேட்டுத் தெரிந்துகொண்ட தலைமைச் செயலாளர் இறையன்புவும், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்கும் பசுமைச் சாலைப் பகுதியில் உள்ள டிஜிஎஸ் தினகரன் சாலையில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

x