ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் மீது சொத்து விபரம் மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றை தவறாக சமர்பித்து, தேர்தலில் வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத் ஆகியோர் மீது, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நெறிகளுக்கு மாறாக, வேட்பாளர்களுக்கான பிரமாண பத்திரத்தில் சொத்துக்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்பாக தவறான தகவல் அளித்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவை தொடர்பாக, திமுக தேனி மாவட்ட முன்னாள் நிர்வாகியான மிலானி என்பவர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மிலானியின் மனுவை பொது நல வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ப.ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும், அது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை பிப்.7க்குள் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் கெடு விதித்தது.
மேலும், மிலானி தரப்பில் காவல்துறை பாதுகாப்பு கோரியிருந்ததால், அவற்றை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போன்று, நீதிமன்றத்தின் வாரன்ட் இன்றி கைது நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து தேனி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர் மீது தனி எஃப்.ஐ.ஆர்களை பதிந்துள்ளனர்.